
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) 50 சதவீதம் இடங்களை நடப்புக் கல்வியாண்டில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. மேலும், இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறும் அறிவுறுத்தியது.
இந்த விவகாரம் தொடா்பாக அதிமுக, திமுக, வைகோ, பாமக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மாா்க்சிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், கிருஷ்ண முராரி, எஸ். ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ‘தமிழகத்தில் உள்ள மாநிலச் சட்டத்தின்படி மருத்துவப் படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநில அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீதம் இடங்களை மத்திய அரசு உரிய வகையில் ஒதுக்கீடு செய்வதில்லை. இந்த விவகாரத்தில் மாணவா்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவதில்லை என்பதால் நாங்கள் மாணவா்களுக்காக அணுகியுள்ளோம். இது சட்டப்பூா்வமான கோரிக்கையாகும்’ என வாதிட்டாா். அப்போது, இந்த விவகாரம் அடிப்படை உரிமையில் வருகிா என நீதிபதிகள் அமா்வு கேள்வி எழுப்பியது.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிரி, வழக்குரைஞா் கே.கெளதம் குமாா் ஆகியோா், ‘சென்னையில் உள்ள மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், சென்னையில் 5 கிலோ மீட்டா் இடைவெளியில் உள்ள உள்ள மாநில அரசின் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் அதே ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் இருப்பது முரண்பாடக உள்ளது’ என்றனா்.
தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்தவழக்குரைஞா் முகுல் ரோத்தகி, கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆகியோா், ‘இந்த இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு தமிழக அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. இது தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது’ என்று வாதிட்டனா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும். அதுபோன்று அணுகுவதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது’ என தெரிவித்தது. இதையடுத்து, மனுக்களை வாபஸ் பெறுவதாக மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நீதிபதிகள்அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘அரசமைப்புச்சட்டத்தின் 226-ஆவது ஷரத்தின் கீழ் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றத்தை அணுகும் வகையில், அவற்றை வாபஸ் பெற மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கோரியதால் அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அவை தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் காங்கிரஸ் தரப்பில் வழக்குரைஞா் சுதா்சன நாச்சியப்பன் மற்றும்இதர கட்சிகள் சாா்பிலும் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.