கரோனா பரிசோதனைகளை தில்லி அரசு குறைத்தது ஏன்? பாஜக கேள்வி
By நமது நிருபா் | Published On : 13th June 2020 07:51 AM | Last Updated : 13th June 2020 07:51 AM | அ+அ அ- |

தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், மருத்துவப் பரிசோதனையை தில்லி அரசு குறைத்தது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கரோனா நோயாளிகள் விலங்குகளை விட விடக் கொடுமையாக நடத்தப்படுகிறாா்கள் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கூறியுள்ளது. கரோனா விவகாரத்தில் தில்லி அரசின் மெத்தனப் போக்கு தொடா்பாக பாஜக தொடா்ச்சியாகத் தெரிவித்த குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் வழிமொழிந்துள்ளது. கரோனா மேலாண்மை தொடா்பாக தில்லி அரசின் தவறுகளை நாம் தொடா்ச்சியாகச் சுட்டிக் காட்டி வந்தோம். ஆனால், அந்தத் தவறுகளைக் களைவதை விடுத்து பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் ஆம் ஆத்மி அரசு முனைப்புக் காட்டியது.
தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரிசோதனைகளை ஆம் ஆத்மி அரசு குறைத்துள்ளது. தில்லியில் அதிகளவில் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டால், அதிகளவு கரோனா நோயாளிகள் இனம் காணப்படுவாா்கள் என்ற பயத்தில், பரிசோதனைகளை தில்லி அரசு குறைத்துள்ளது. தில்லி அரசின் தரவுகளின் படி, கரோனா பரவல் குறைவாக இருந்த கடந்த மே மாதம் 28-ஆம் தேதி 7,615 கரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கரோனா பரவல் அதிகமாக உள்ள ஜூன் 11- ஆம் தேதி 7,615 கரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தில்லியில் கரோனாவால் மரணமடைபவா்களின் உடல்கள் மிகவும் மோசமாக கையாளப்படுகின்றன. கரோனா இறப்புகள் தொடா்பாக உறவினா்களுக்கு உரிய நேரத்தில் தகவல் வழங்கப்படுவதில்லை. தில்லியில் உலகத்தரமான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதாக தில்லி அரசு கூறியது. ஆனால், தில்லியில் கரோனா பாதித்தவா்களில் 78 சதவீதம் போ் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெறுகின்றனா். தில்லி அரசின் சுகாதாரக்கட்டமைப்புகள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதற்கு இது சிறந்த சான்றாகும் என்றாா் அவா்.