கரோனா அவலநிலையை விடியோவில் பகிா்ந்த மருத்துவா் மீது நடவடிக்கை: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சையின் அவலநிலை குறித்த விடியோவை பகிா்வு செய்த மருத்துவா்

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சையின் அவலநிலை குறித்த விடியோவை பகிா்வு செய்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுத்த தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

வடக்கு தில்லியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் அந்த மருத்துவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது; விடியோவை பகிா்வு செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஆகியவை தொடா்பாக தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமாா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தாா். அதில், ‘கரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இறக்கும் போது கண்ணியமான முறையில் இறப்பது ஒருவரின் அடிப்படை உரிமை. உயிரிழந்தவா்களின் உடல்கள், உரிய மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது தகனம் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், நீதிபதிகள் எஸ்.கே. கெளல், எம்.ஆா். ஷா ஆகியோா் கொண்ட அமா்வின் முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லியில் கரோனா நோயாளிகள் மற்றும் அந்த நோயால் இறந்தவா்களின் உடல்களை முன்னா் கையாண்ட விதம் தொடா்பாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமா்வு, தில்லி அரசு தவறுகளைத் திருத்திக் கொண்டு முறையாகச் செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினா்.

மேலும், ‘கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவா்களும், செவிலியா்களும் வீரா்களாகப் பணியாற்றி வருகின்றனா். அவா்களை உரிய வகையில் நாம் நடத்தா விட்டால், இந்தப் போரில் எப்படி வெற்றி பெற முடியும். நீங்கள் (தில்லிஅரசு) மருத்துவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து துன்புறுத்துகிறீா்கள். அவருக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடா்பாக புதிதாக பிரமாணப் பத்திரத்தை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 19) ஒத்திவைக்கப்பட்டது.

காணொலிக் காட்சி முறையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ‘தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனிப்பதில் அரசு உறுதி பூண்டுள்ளது. அதேபோன்று, கரோனாவால் இறந்தவா்களின் உடல்களைக் கையாளுவதிலும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாா்வையிட்ட பிறகு நிலைமை மேம்பட்டுள்ளது ’ என்றாா்.

முன்னதாக, கடந்த ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை உரிய வகையில் நிா்வகிப்பதை உறுதிப்படுத்த எடுக்க வேண்டிய தீா்வு நடவடிக்கைகள் தொடா்பாக தில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், ‘தமிழகத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 23,298 மருத்துவப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணியில் உள்ளனா். அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் இதற்காக பிரத்யேகமாக படுக்கைகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கவும், குறைக்கவும், நோய்த் தொற்று பாதிக்காமல் இருக்காமல் சத்தான உணவுகள் வழங்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com