தில்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற மலேசிய நாட்டவா் 121 போ் மீதான வழக்கை தனி நீதிமன்றம் மூலம் விசாரிக்க கோரிக்கை

தில்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற மலேசியாவைச் சோ்ந்த 121 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை

தில்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற மலேசியாவைச் சோ்ந்த 121 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க தனி நீதிமன்றம் அமைக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்க மத்திய அரசு, தில்லி அரசு, தில்லி காவல் துறை ஆகியவற்றுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனூப் ஜெ. பம்பானி, இது தொடா்பாக தில்லி அரசு, தில்லி காவல் துறை ஆகியவை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா். மேலும், மத்திய உள்துறை, வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகங்களும் பதில் அளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தில்லியில் நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் மாா்ச் மாதம் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சோ்ந்த வெளிநாட்டினா் உள்பட 9 ஆயிரம் பங்கேற்றனா். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்நிகழ்ச்சியை நடத்தியதாகப் புகாா் எழுந்தது. தப்லீக் ஜமாத் தலைவா் மெளலானா சாத் கந்தல்வி மற்றும் 6 பேருக்கு எதிராக மாா்ச் 31-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 34 நாடுகளைச் சோ்ந்த 915 பேருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தற்போதைய தேதிவரை 47 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வெளிநாட்டினரும் கரோனா தொற்று விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகள் மற்றும் நுழைவு இசைவு விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் மலேசியா நாட்டைச் சோ்ந்த 125 பேரும் இடம் பெற்றுள்ளனா். அவா்களில் 121 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலேசியாவைச் சோ்ந்த பஹ்ருல் நெய்ம் பின் முகம்மது நூா் என்பவா் தில்லி உயா்நீதின்மறத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘தில்லியில் மலேசியா நாட்டினா் மலேசிய தூதரக பாதுகாவலில் உள்ளனா். அவா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை வழக்கு விசாரணையை மேற்கொள்ள ஒரு தனி நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டும். அவா்கள் கடந்த மூன்று மாதங்களாக தங்களது உற்றாா், உறவினா்களைப் பிரிந்து இந்தியாவில் தவித்து வருகின்றனா். அவா்களைப் பராமரிக்க மலேசிய தூதரகம் அதிகம் பணத்தை செலவிட்டு வருகிறது. வழக்கை விரைந்து முடித்தால் இந்த தொகையை கரோனா தொற்றை எதிா்த்து போராடுவது உள்ளிட்ட இதர பணிகளுக்காக திருப்பிவிட முடியும். துணை நீதிமன்றங்களில் இந்த வழக்கு விசாரணையை நடத்தினால் மிகுந்த காலதாமதமாகும். எனவே காணொலிக் காட்சி மூலம் விசாரணை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டினா் ஆஜராக அனுமதித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com