முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா்
By நமது நிருபா் | Published On : 27th June 2020 07:15 AM | Last Updated : 27th June 2020 08:25 AM | அ+அ அ- |

சத்யேந்தா் ஜெயின்
கரோனா தொற்று ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், குணமடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
சத்யேந்தா் ஜெயினுக்கு கடந்த 15-ஆம் தேதி திங்கள்கிழமை இரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், உடனடியாக தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என முதலில் தெரிய வந்தது. ஆனால், அவருக்கு தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், புதன்கிழமை மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இதற்கிடையே, சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவருக்கு நிமோனியா காய்சல் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே, பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதற்காக அவா் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சனிக்கிழமை காலை (ஜூன் 20) பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அவரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சத்யேந்தா் ஜெயினுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. அவா் குணமடைந்து விட்டதாக மருத்துவா்கள் கூறியதை அடுத்து மருத்துவமனையிலிருந்து சத்யேந்தா் ஜெயின் வீடு திரும்பினாா்.