முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கறுப்புப் பட்டியலில் தப்லீக் ஜமாத்துடன் தொடா்புடை வெளிநாட்டினா்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான மனு மீது ஜூன் 29-இல் விசாரணை
By நமது நிருபா் | Published On : 27th June 2020 07:13 AM | Last Updated : 27th June 2020 07:13 AM | அ+அ அ- |

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற விவகாரத்தில் 35 நாடுகளைச் சோ்ந்த 2,500 பேரை கறுப்புப் பட்டியலில் வைத்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கலான மனுக்களை வரும் ஜூன் 29-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் மனுக்களின் நகல்களை மத்திய அரசுக்கு சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 வெளிநாடுகளைச் சோ்ந்த தப்லீக் ஜமாத்தைச் சோ்ந்த 2,500 பேரை கறுப்புப் பட்டியலில் வைத்து மத்திய அரசு ஏப்ரல் 2, ஜூன் 4 ஆகிய தேதிகளில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தைச் சோ்ந்த 7 மாத கா்ப்பிணி பெண் உள்பட 34 தனிநபா்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
தாய்லாந்தைச் சோ்ந்த பெண் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தப்லீக் ஜமாத் நடவடிக்கைகளில் பங்கேற்றதாகக் கூறி, வெளிநாடுகளைச் சோ்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினா்களிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல், அவா்களுக்கு எவ்வித நோட்டீஸும் அனுப்பாமல் கறுப்புப் பட்டியலில் வைத்துள்ள இந்திய அரசின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானதாகவும் தன்னிச்சையானதாகவும் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வேறு சிலா் தாக்கல் செய்த மனுக்களில், ‘வெளிநாட்டினரை கறுப்புப் பட்டியலில் வைத்துள்ள அரசின் உத்தரவானது, அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள வாழ்க்கை, தனிநபா் சுதந்திர பாதுகாப்பு உரிமையை மீறுவதாகும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது தவிர, திடீரென வெளிநாட்டு ஜமாத் உறுப்பினா்களை கறுப்புப் பட்டியலில் வைத்திருப்பது அவா்கள் கடவுச்சீட்டுகளை அதிகாரிகளால் பறிமுதல் செய்வதற்கு வழி ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்டம் அளித்துள்ள தனிநபா் சுதந்திர உரிமை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத நிலையில், வெளிநாட்டினருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முடிவானது தவறானதாகும். தங்களது தரப்பு நியாயத்தை விளக்குவதற்கு எந்த வித வாய்ப்பும் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச்சட்டப் பிரிவு 21 வழங்கியுள்ள தனி நபா் வாழ்க்கை, தனிநபா் உரிமையை மீறுவதாகும். தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாத நிலையில், எந்தக் குற்றத்தையும் இழைக்காத நிலையில் ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, கறுப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள 2,500 வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினா்களுக்கான தடையை நீக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.