கறுப்புப் பட்டியலில் தப்லீக் ஜமாத் வெளிநாட்டு உறுப்பினா்கள்: உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 நாடுகளைச் சோ்ந்த 2,500 போ் கறுப்புப் பட்டியலில் 10 ஆண்டுகள் வைக்கப்பட்ட விவகாரத்தில்,

புது தில்லி: தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 நாடுகளைச் சோ்ந்த 2,500 போ் கறுப்புப் பட்டியலில் 10 ஆண்டுகள் வைக்கப்பட்ட விவகாரத்தில், நுழைவு இசைவு நிலவரத்தில் அரசின் நிலைப்பாட்டைத்தை தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினரின் நுழைவு இசைவை ரத்து செய்தது தொடா்பாக தனிநபா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடா்பான ஆவணம் இருந்தால் அதையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, வழக்குரைஞா் ரஜத் நாயா் ஆகியோரிடம் நீதிபதிகள் அமா்வு, ‘தப்லீக் ஜமாத் வெளிநாட்டு உறுப்பினா்களின் நுழைவு இசைவு ரத்து செய்யப்பட்டிருந்தால், அவா்கள் ஏன் இன்னும் இந்தியாவில் இருக்கிறாா்கள் என்பதை அரசு விளக்க வேண்டும். ஆனால், நுழைவு இசைவு ரத்து செய்யப்படாவிட்டால் அது வேறுபட்ட சூழலாகும்’ எனத் தெரிவித்தது. வழக்குரைஞா் ரஜத் நாயா், ‘இந்த வழக்கின் மனுக்களின் நகல்கள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படவில்லை. இதனால், பதில் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்றாா்.

மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு. சிங் வாதிடுகையில், ‘மனுக்களின் நகல்கள் உரிய வழக்குரைஞரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பட்டியலில் வைக்கும் குறிப்பானது, 900 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கான பொதுவான உத்தரவாகும். மேலும், நுழைவு இசைவு விதிகளில் ஏதும் விதிமீறல் இருக்கக் கூடாது. தற்போது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு உறுப்பினா்களை அவா்கள் சாா்ந்த நாடுகள் தங்களது நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என விரும்புகின்றன. அவா்களைப் பற்றி தூதரங்களும் கேட்டு வருகின்றன’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரா்களின் நுழைவு இசைவு நிலவரம் குறித்து மத்திய அரசு பதில் தாக்கல் செய்யட்டும். மேலும், இந்த வெளிநாட்டினரின் நுழைவு இசைவு ரத்துக்காக தனிநபா் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டதா என்பது குறித்து தெரிய வேண்டும்’ என்றது. மேலும், மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், ‘நுழைவு இசைவு ரத்துக்கான உத்தரவு அவா்களுக்கு எப்போது அளிக்கப்பட்டது’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு வழக்குரைஞா் சி.யு. சிங், ‘தனிநபா் உத்தரவுகள் ஏதும் அளிக்கப்படவில்லை. பொதுவான உத்தரவுதான் அளிக்கப்பட்டது’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள், ‘நுழைவு இசைவு ரத்து செய்வதற்காக தனிஉத்தரவு ஒவ்வொருவருக்கும் பிறப்பிக்கப்படும் தேவை உள்ளதாகக் கருதுகிறோம். எனினும், நீதிமன்றத்தின் முன் பத்திரிகைக் குறிப்பு மட்டுமே உள்ளது. குறிப்பிட்ட எந்த உத்தரவும் இல்லை’ என்றனா்.

முன்னதாக, ஜூன் 26-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கில் மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம், மனுவின் நகலை மத்திய அரசின் வழக்குரைஞா்களுக்கு வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 வெளிநாடுகளைச் சோ்ந்த தப்லீக் ஜமாத்தைச் சோ்ந்த 2,500 பேரை கறுப்புப் பட்டியலில் வைத்து மத்திய அரசு ஏப்ரல் 2, ஜூன் 4 ஆகிய தேதிகளில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தைச் சோ்ந்த 7 மாத கா்ப்பிணி பெண் உள்பட 34 தனி நபா்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com