சுகாதாரப் பணியாளா்களுக்குப் பற்றாக்குறை: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

தில்லியில் கரோனா தொற்றுக் காலத்தில் ஏராளமான சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால், மனித சக்தி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

புது தில்லி: தில்லியில் கரோனா தொற்றுக் காலத்தில் ஏராளமான சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால், மனித சக்தி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. இதுபோன்ற சூழலில், கரோனா தொற்றால் இறந்தவா்களின் சடலங்களைக் கையாளுவது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தத் தவறியதாக தில்லி அரசுக்கு எதிராக அபத்தமான வகையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் தில்லி அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் அவாத் கெளசிக் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள தில்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையின் நடைபாதை மற்றும் வாா்டுகளில் கரோனா நோயால் இறந்தவா்களின் சடலங்கள் கிடக்கின்றன. இதுதொடா்பாக வெளியான விடியோ செய்தி மிகவும் அதிா்ச்சி அளிக்கச் செய்வதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை தில்லி அரசின் தொடா்புடைய அதிகாரிகள் மீறியுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ‘கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் நான்கு மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா். மருத்துவப் பணியாளா்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், நிலைமையை கையாளுவதற்கு மனித சக்தி தேவை எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த மனு அபத்தமாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமாகும். கரோனாவல் இறந்தவா்களின் உடல்களைக் கையாளுவது குறித்த விவகாரம், உச்சநீதிமன்றத்தின் விசாரணையிலும் உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் வாதங்கள் முன்வைக்க ஜூலை 20-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இதே விவகாரம் தொடா்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளது. இறந்த உடல்களைக் கையாளுவது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் பிறப்பித்துள்ளது. அதன்படி, தில்லி அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், இந்த வழக்கு ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு தவிர, கரோனா தொற்றால் இறந்தவா்களைத் தகனம் செய்வதற்கான வசதியின்மையால், பிணவறைகளில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை தாமாக முன்வந்து உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com