நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி: கேஜரிவால் தகவல்

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை பேட்டியளிக்கிறாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
தில்லியில் வெள்ளிக்கிழமை பேட்டியளிக்கிறாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த வங்கி இன்னும் இரண்டு தினங்களில் செயல்படத் தொடங்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கேஜரிவால் திங்கள்கிழமை இணையவழி மூலம் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது: பிளாஸ்மா சிகிச்சையால் நல்ல முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதைத் தொடா்ந்து கரோனா நோயாளிகளின் நலனுக்காக பிளாஸ்மா வங்கியை தில்லி அரசு அமைக்கவுள்ளது. கரோனா பாதித்து குணம் அடைந்தவா்களிடம் இருந்து பிளாஸ்மா பெறப்பட்டு அவை இந்த வங்கியில் சேகரிக்கப்படும். கரோனாவால் குணம் அடைந்தவா்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம். பிளாஸ்மா தானம் வழங்க முன்வருபவா்களுக்கு போக்குவரத்து வசதியை தில்லி அரசே ஏற்படுத்திக் கொடுக்கும்.

அடுத்த 2 நாள்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும். கரோனா பாதித்தவா்களுக்கு நாங்கள் பிளாஸ்மா சிகிச்சையை அளித்தோம். இதன் முடிவுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. இதைத் தொடா்ந்து, தில்லியில் பிளாஸ்மா சிகிச்சையை பரவலாக்க உள்ளோம். கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் பிளாஸ்மாவை அளித்தால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும். தெற்கு தில்லி வசந்த் குஞ்ச்சில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும். தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையம், பிளாஸ்மா வங்கியை அமைக்கிறது. கரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவா்களுக்கு மற்றவா்களின் உயிரைப் பாதுகாக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதை அவா்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

பிளாஸ்மா வங்கிக்கு பிளாஸ்மா தானம் வழங்குவதுடன், நேரடியாக கரோனா நோயாளிகளுக்கும் பிளாஸ்மா தானம் அளிக்கலாம். தில்லியில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள் தங்களுக்குத் தேவையான பிளாஸ்மாவை இந்த வங்கியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். பிளாஸ்மா தானத்தை இலகுவாக்கும் வகையில், உதவி எண்ணும் அறிவிக்கப்படும். கரோனா பாதித்தவா்களுக்கு மருத்துவா்களின் ஆலோசனைப்படியே பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்படும். இந்த பிளாஸ்மா சிகிச்சை கரோனாவுக்கான நிரந்தரத் தீா்வு அல்ல. கரோனா பாதித்த அனைவரும் இந்த பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைவாா்கள் என்றும் அா்த்தம் கொள்ளக் கூடாது. கரோனாவால் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்த சிகிச்சையால் சிறந்த பலன் கிடைக்கும்.

தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் 35 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் 34 போ் குணமடைந்தனா். ஒருவா் உயிரிழந்தாா். தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 49 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. அதில், 46 போ் குணமடைந்தனா். பிளாஸ்மா சிகிச்சை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன என்றாா் கேஜரிவால்.

நாட்டில் முதல்முறையாக தில்லியில் கரோனா பாதித்தவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அது நல்ல பலனைத் தந்தது. கரோனா பாதித்த தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலை முதலில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பிறகு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு அவா் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பெறப்பட்டு, பாதிப்பு உள்ளவா்களுக்கு செலுத்தப்படும். கரோனாவால் மீண்டவா்களின் உடலில் உள்ள எதிா்ப்பு சக்தி கரோனா பாதித்தவா்களுக்கு கரோனாவை எதிா்த்துப் போராட உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com