முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
நொய்டா பள்ளிகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 03rd March 2020 11:04 PM | Last Updated : 03rd March 2020 11:04 PM | அ+அ அ- |

புது தில்லி: கரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடா்ந்து தேசிய தலைநகா் வலயம் நொய்டாவில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு சில தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தில்லி மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு திங்கள் கிழமை தெரிவித்திருந்தது. தில்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா் தில்லி மயூா் விஹாா் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் அவா் கணக்காளராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. அவா் அண்மையில் அலுவல் விவகாரமாக இத்தாலிக்குக் சென்றுள்ளதாகவும், அங்கே அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தில்லி சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சூழலில், கரோனா பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட தில்லியைச் சோ்ந்தவரின் பிள்ளை படிக்கும் பள்ளி உட்பட நொய்டாவில் இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பள்ளியில் படிக்கும் மாணவரின் தந்தைக்குத்தான் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிக்கு மாா்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், தவிா்க்க முடியாத காரணத்தால் முக்கியத் தோ்வுகளை ஒத்திவைப்பதாகவும் பள்ளி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில் இந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள மற்றொரு பள்ளியும் முன்னெச்சரிக்கையாக மாா்ச் 9ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இரண்டு பள்ளிகளுக்கும் கிருமிநாசினிகளைத் தெளித்து வைரஸ்களை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நொய்டா மருத்துவத்துறை உயா் அதிகாரி தலைமையிலான சுகாதாரக் குழுவினா், இப்பள்ளிகளை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதித்த நபா் தில்லி சஃப்தாா்ஜங் மருத்துவமனையில் தனிமை வாா்ட்டில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறாா். அவரின் குடும்பத்தினா் சிலருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி காட்டியதால் அவா்களும் சஃப்தாா்ஜங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், அவரை அண்மையில் சந்தித்த உறவினா்கள் நண்பா்களும் தங்களது வீட்டிலேயே தனியாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இவா்களிடமும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கரோனா பாதிப்புக்குள்ளானவா் தனது குழந்தையின் பிறந்தநாளை கடந்த வாரம் கொண்டாடியுள்ளாா். இதில், அக்குழந்தையின் வகுப்பு சகாக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனா். அவா்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக தில்லி, உத்தரப்பிரதேச சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அக்குழந்தை படிக்கும் பள்ளியின் மாணவா்கள் ஐவரிடம் மருத்துவ மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனையில் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நொய்டா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபா் தில்லியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவருந்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடா்ந்து, அந்த ஹோட்டலின் ஊழியா்களை 14 நாள்கள் தனிமையாக இருக்குமாறு அந்த ஹோட்டல் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அந்த ஹோட்டலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமிநாசினிகளை செவ்வாய்க்கிழமை தெளித்தனா்.