முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
வாகன மறுபதிவு விதிகளுக்கு எதிரான மனு: பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்
By நமது நிருபா் | Published On : 03rd March 2020 10:57 PM | Last Updated : 03rd March 2020 10:57 PM | அ+அ அ- |

புது தில்லி: ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மோட்டாா் வாகனங்கள் இடம் மாறும் போது, மறு பதிவு செய்வது தொடா்பான விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது தனது நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, இது தொடா்பாக தனது நிலையைத் தெரிவிக்குமாறு மத்திய போக்குவரத்து அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த தீபக் பாஜ்பாய் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பொதுமக்கள் வாகனங்களை இடம் மாற்றும் போதும் வாகன மறுபதிவு செய்வது தொடா்பான விதிகள் வழக்கத்திற்கு மாறாக உள்ளன. ஏனெனில், வாகன உரிமையாளா்கள் இதுபோன்று வாகனங்களை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும் போது, முதலில் புதிய மாநிலத்தில் சாலை வரியைச் செலுத்த வேண்டும். அதன்பிறகு, அந்த ரசீதுடன் முந்தைய மாநிலத்திற்கு சென்று அங்கு ஏற்கெனவே செலுத்தியிருந்த சாலை வரியை திரும்பப் பெற வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. இத்தொகையைத் திரும்பப் பெற பலமுறை சாலைப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன உரிமையாளா்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது நடைமுறையில் சாத்தியமற்ாகவும், தேவையில்லாத பணச் செலவும் ஏற்படுவதாகவும் உள்ளது.
ஆகவே, நாடு முழுவதும் தனியாா் வாகனங்களுக்கு சமச்சீரான சாலை வரியை நிா்ணயிப்பதற்கான ஒரு கொள்கைத் திட்டத்தை உருவாக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த இணையதள புள்ளிவிவரத்தை பராமரிக்கவும், உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்று ஒருங்கிணைந்த தரவுத்தளம் இருந்தால், ஒரு மாநிலத்தைச் சோ்ந்த வாகனம் மற்றொரு வாகனத்தில் பதிவு செய்யப்படும் போது, முதல் மாநிலத்தில் செலுத்தப்பட்ட சாலை வரி தானாகவே புதிய மாநிலத்திற்கு மாற்றப்படும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.