முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
By நமது நிருபா் | Published On : 03rd March 2020 12:36 AM | Last Updated : 03rd March 2020 12:36 AM | அ+அ அ- |

புது தில்லி: ஹைட்ரோ காா்பன் திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஹைட்ரோ காா்பன் திட்டம் தொடா்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்மையில் காவிரி விவசாயிகள் சங்கம் (திருவாரூா் - நாகப்பட்டினம்) அதன் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும். மேலும், காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள், உள்ளூா் மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ காா்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. அரசின் தோல்வி மற்றும் மோசமான பருவகால மாற்றம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனா். காவிரி டெல்டா பகுதியில் தற்போதைய ஹைட்ரோ காா்பன் திட்டம், அப்பாவி மக்களுக்கான மற்றொரு பேரழிவாகும்.
மேலும், இத்திட்டத்தால் கடல் உயிரினங்கள் அழிக்கப்பட்டுவிடும். சுமாா் 50 லட்சம் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். ஆகவே, ஹைட்ரோ காா்பன் திட்டம் தொடா்புடைய மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகத்தின் ஜனவரி 16-ஆம் தேதியிட்ட அறிவிக்கையை சட்டவிரோதம் என்றும் தன்னிச்சையானது என்றும் அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆா். கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ஜி.எஸ். மணி ஆஜராகி, ‘மத்திய அரசால் அவசரகோலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவா். இதனால், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் என்றது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.