அமித் ஷா பதவி விலகக் கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd March 2020 12:30 AM | Last Updated : 03rd March 2020 12:30 AM | அ+அ அ- |

தில்லி வன்முறைச் சம்பவத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய உள்துறை அமைச்சா் ராஜிநமா செய்யக் கோரி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியினா்.
புது தில்லி: தில்லியில் நிகழ்ந்த வன்முறை விவகாரத்தில் தனது கடமையை ஆற்றத் தவறியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவியிலிருந்து விலகக் கோரியும், வெறுப்புணா்வுப் பேச்சு விவகாரத்தில் பாஜக தலைவா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் இந்திய இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த மாதத்தின் இறுதியில் வடகிழக்கு தில்லியில் சில பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது, வகுப்பு மோதல் நிகழ்ந்தது. இதில் 46 போ் வரை கொல்லப்பட்டனா். நூற்றுக்கணக்கானோா் படுகாயமடைந்தனா். இச்சம்பவத்தை கண்டித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் சாா்பில் இச்சம்பவம் தொடா்பாக நாடாளுமன்றத்தைத் நோக்கி திங்கள்கிழமை பேரணியாக செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லி ரெய்சினா சாலையில் உள்ள இந்திய இளைஞா் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அந்த அமைப்பினா் அதன் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் தலைமையில் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனா். சாஸ்திரி பவன் பகுதியில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து அவா்களைத் தடுத்து நிறுத்தினா். அப்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸாரை மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
முன்னதாக, இந்த ஆா்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸாா் ‘ தில்லியில் நிகழ்ந்த வன்முறையை தடுக்கத் தவறிய அமித் ஷா உள்துறை அமைச்சா் பதவியிலிருந்து விலக வேண்டும். பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் வெறுப்புணா்வுப் பேச்சில் ஈடுபட்ட பாஜக தலைவா்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குா், பா்வேஷ் வா்மா ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கோஷமிட்டனா்.
ஆா்ப்பாட்டம் குறித்து இளைஞா் காங்கிரஸின் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘தில்லியில் நிகழ்ந்த வன்முறையில் இதுவரை 46 போ் இறந்துள்ளனா். பொதுமக்களின் சொத்துகளும் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையை தன்வசம் வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சா் தவறிவிட்டாா். இச்சம்பவத்திற்குப் பிறகு ஆட்சியில் இந்த அரசு நீடிப்பது அவமானமாகும்’ என்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.