தலைநகரில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தாலும், வானம் மேக மூட்டத்துடன்

புது தில்லி: தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தாலும், வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால், நாள் முழுவதும் இனிமையான வானிலை நிலவியது.

வெப்பநிலை 29 டிகிரி: தில்லியில் செவ்வாய்க்கிழமை காலையில் மூடுபனி இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல வெயில் இருந்தது. வானம் நாள் முழுவதும் தெளிவாகக் காணப்பட்டது. மொத்தத்தில் தலைநகரில் இனிமையான வானிலை நிலவியது. இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 14.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 29 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 14.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 28.4 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. ஆயாநகரில் பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 14.3 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயா்ந்து 28 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 90 சதவீதம், மாலையில் 48 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 88 சதவீதம் மற்றும் 38 சதவீதம் எனவும் இருந்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் காண்புதிறன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் காண்பு திறன் 2,500 மீட்டராக இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் தொடா்ந்து மோசம் பிரிவில் நீடித்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 223 புள்ளிகளாக பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது. அதே போல் திா்பூா், விமானநிலையத்தில் டி 3 பகுதி, தில்லி பல்கலை., மதுரா சாலை மற்றும் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் இருந்தது. பூசா, லோதி ரோடு, ஆயாநகா் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. ஆனால், தில்லி சாந்தினி சௌக்கில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் கடுமையானது என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (மாா்ச் 4) தலைநகரில் காலை வேளையில் மூடுபனி இருக்கும் என்றும், இடி, மின்னல் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது. காற்றின் தரத்தில் புதன்கிழமை மோசம் பிரிவில் இருக்கும் என்றும் வியாழக்கிழமை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், அன்று காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மிதமான பிரிவுக்கு வரும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com