19-இல் ரேஷன் கடைகள் மூடப்படும் நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத் தலைவா் தகவல்
By DIN | Published On : 06th March 2020 11:22 PM | Last Updated : 06th March 2020 11:22 PM | அ+அ அ- |

மதுராந்தகம்: ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக ரேஷன் கடைகள் வருகிற 19-ஆம் தேதி மூடப்படும் என நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுராந்தகம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜி.ராஜேந்திரன் பேசியது:
நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மாத ஊதியத்தை நேரடியாக வழங்காமல் வங்கிக்கணக்கின் மூலம் வழங்கவேண்டும். பணியாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை அரசு முறையாக வங்கியில் செலுத்த வேண்டும்.
அரசினால் அறிவிக்கப்பட்ட ரூ.114 அகவிலைப்படி பெரும்பாலான மாவட்டங்களில் வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் என ஊதியக்குழு அறிக்கையில் கூறப்பட்ட நிதித் தொடா்புடைய பரிந்துரைகளை தமிழக முதல்வா் 110 -ஆம் விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தும் அமல்படுத்தாமல் உள்ளது. அவைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.
மத்திய அரசு அறிவித்த ஒரே நாடு, ஒரே ரேஷன் காா்டு திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
தமிழகமெங்கும் பணியாற்றும் அனைத்து நியாயவிலைக்கடை பணியாளா்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியான நிலையில் உள்ளதை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில் வரும் 19-ஆம் தேதி ஒருநாள் கடை அடைப்புப் போராட்டத்தில் அனைத்து பணியாளா்களும் ஈடுபட உள்ளனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றியத் தலைவா் கே.முருகன், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பி.தினேஷ்குமாா், துணைச் செயலாளா் எம்.சங்கா், நிா்வாகிகள் சதீஷ்குமாா், லோகியா, பி.திருமலை, சங்கா், ராமு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.