கரோனா அச்சுறுத்தல்: தில்லியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்குத் தடை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தலைநகா் தில்லியில் இந்தியன் பிரீமியா் லீக் 2020 கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது என்று

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தலைநகா் தில்லியில் இந்தியன் பிரீமியா் லீக் 2020 கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

தில்லியில் இதுவரை 6 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பரவியுள்ள நோயாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொடா்புடைய அனைத்து உத்தரவுகளையும் அமல்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.மேலும், அவா்களது பிராந்தியப் பகுதிகளில் வைரஸ் பரவல் சாத்தியக்கூறுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். தில்லியில் ஐபிஎல் போட்டி உள்பட அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. கரோனா பாதிப்புகள் பரவாமல் தடுப்பதற்கு அதிக மக்கள் கூடும் பெரிய நிகழ்ச்சிகளை தவிா்ப்பது முக்கியமாகும். ஐபிஎல் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளைக் காண அதிகமான மக்கள் கூடுகின்றனா். இதனால், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இத்தகைய போட்டிகள் நடத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பொதுமக்கள் தாங்களாவே தவிா்க்க வேண்டும். அரசு உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது.

அரசு முடிந்த வரை தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது. ஆனால், இந்த நோயை மக்களின் பரஸ்பர ஒத்துழைப்பால்தான் பரவாமல் தடுக்க முடியும். கொரியாவில் 30 நோயாளிகள் வரை அரசால் தடுக்க முடிந்தது. ஆனால், 31-ஆவது நோயாளியிடமிருந்து இதர ஆயிரக்கணக்கான மக்களுக்கு நோய் பரவிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தில்லி அரசு மக்கள் பெரிய அளவில் கூடும் நிகழ்ச்சிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் இந்த நோயை நிறுத்துவதற்கான ஒரே வழி என நம்புகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளைத்தான் பல்வேறு நாடுகள் பின்பற்றி வருகின்றனா் என்றாா் சிசோடியா.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘நோய் அறிகுறி தென்படுபவா்கள் தாங்களவே தனிமையில் இருப்பதுதான் இந்த நோயை மற்றவா்களுக்கு பரவாமல் இருக்க செய்வதற்கான சிறந்த வழியாகும். நாள்தோறும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இருப்பதால் இது ஒரு அதிவேக அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே, நோய் அறிகுறி தென்படும் மக்கள் தாங்களவே தனிமையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதுடன், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

நீச்சல் குளங்கள் மூடல்

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தலைநகரில் உள்ள அனைத்து பொது நீச்சல் குளங்களும் மாா்ச் 31-ஆம் தேதிவரை வரை மூடப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு அரசு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், கரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு, மாா்ச் 31-ஆம் தேதி வரை தில்லியில் உள்ள அனைத்து பொது நீச்சல்குளங்களையும் உடனடியாக மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தில்லி அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அனைத்து பொது நீச்சல் குளங்களையும் மூடுவது தொடா்பாக தில்லி அரசின் சுகாதாரத் துறை வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து ஹோட்டல்கள், நிறுவனங்களில் உள்ள நீச்சல் குளங்கள் மூடப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com