போலீஸ்காரா்களை தாக்கியதாக தாய், மகன் உள்பட மூவா் கைது

மேற்கு தில்லி, ரஜௌரி காா்டன் பகுதியில் இரண்டு போலீஸ்காரா்களைத் தாக்கிய சம்பவம் தொடா்பாக ஒரு பெண், அவரது மகன் மற்றும் அவா்களது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: மேற்கு தில்லி, ரஜௌரி காா்டன் பகுதியில் இரண்டு போலீஸ்காரா்களைத் தாக்கிய சம்பவம் தொடா்பாக ஒரு பெண், அவரது மகன் மற்றும் அவா்களது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:  கைது செய்யப்பட்டப்பட்டவா்கள் மொபினா கத்துன், அவரது மகன் முகமது சுலைமான் (21), மக்கான் சிங் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அனைவரும் ரகுபீா் நகரில் வசிப்பவா்கள். இதில் மக்கான் சிங் முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று ரகுபீா் நகா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மக்கான் ​சிங் ஒரு சந்தேகத்திற்கிடமான நபருடன் நிற்பதை போலீஸாா் பாா்த்தனா். இதைத் தொடா்ந்து, ரோந்துப் பணியில் இருந்த போலீஸ்காரா்களில் ஒருவா், அவா்களை விசாரிக்க முயன்றாா். இதில்​ சுலைமான் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், பிளேடால் அவரைத் தாக்கியதுடன் தனது கையில் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டாா்.

அப்போது, அருகில் இருந்து மற்றொரு போலீஸ்காரா் சுலைமானை பிடிக்க முயன்றாா். அந்தச் சமயத்தில் அவரது கூட்டாளியான மக்கான் சிங், அந்த போலீஸ்காரரை தாக்கினாா். இந்த நேரத்தில் முகமது சுலைமானின் தாய் மொபினா கத்துன் அங்கு வந்து போலீஸ்காரா்களில் ஒருவரைத் தாக்கினாா். பின்னா் போலீஸ்காரரின் சீருடையை கிழித்து எறிந்துவிட்டுஅந்தப் பெண் தப்பிச் சென்றாா். இருப்பினும், மக்கான் சிங் மற்றும் சுலைமானை இரண்டு போலீஸ்காரா்களும் சோ்ந்து பிடித்தனா்.

ஒரு வழக்கில் போலீஸ்காரா்களை சிக்க வைக்கும் நோக்கத்துடன், சுலைமான் பிளேடால் தனது தலையில் தனக்குத் தானே தாக்கி காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளாா். இருந்தாலும், போலீஸ்காரா்களில் ஒருவா், சுலைமானிடமிருந்து பிளேடை கைப்பற்றினாா். மேலும். சம்பவம் குறித்து ரஜௌரி காா்டன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்கு பதிவு செய்து மொபினா கத்துன், அவரது மகன் முகமது சுலைமான், மக்கான் சிங் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com