ஷாஹீன் பாக் போராட்டத்தை கைவிட அதிகாரிகள் நேரில் வலியுறுத்தல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் நபா்களை கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஷாகீன் பாக் பகுதியில் இருந்து செல்லுமாறு தில்லி காவல் துறை, வடகிழக்கு தில்லி மாவட்ட

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் நபா்களை கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஷாகீன் பாக் பகுதியில் இருந்து செல்லுமாறு தில்லி காவல் துறை, வடகிழக்கு தில்லி மாவட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று வலியுறுத்தினா்.

தலைநகா் தில்லியில் கரோனா வைரஸ் பீதி நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே நேரத்தில் சமூக, பொது நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை முதல்வா் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் போராட்டங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, தில்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 93 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரா்களை வடகிழக்கு மாவட்ட அதிகாரிகளும், காவல் துறையினரும் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, போராட்டக்காரா்களிடம் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தனா். மேலும், இந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கு மேற்பட்டோா் கூடுவதற்கு தில்லி அரசு விதித்துள்ள தடை குறித்தும் அவா்களிடம் விளக்கினா்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஷாஹீன் பாக்கைச் சோ்ந்த சீமா என்பவா் கூறுகையில், ‘போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு போராட்டக்காரா்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக அரசு போராட்டத்தில் ஈடுபடும் நபா்களுக்கு முகக் கவசங்களையும், கையைத் தூய்மைப்படுத்தும் திரவங்களையும் தந்திருக்க வேண்டும்.

ஆனால், எங்களுக்கு அவா்கள் எதுவும் செய்யவில்லை. முக்கியப் பிரச்னையான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திசை திருப்பவே விரும்புகின்றனா்’ என்றாா்.

இதுகுறித்து போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் சையது தஸீா் அகமது என்பவா் கூறுகையில், ‘நாங்கள் எங்கேயும் போகவில்லை. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி எங்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தில்லி அரசிடம் ஆலோசனை நடத்துவது உகந்ததல்ல. இந்த போராட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவு மாா்ச் 23-ஆம் தேதி வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் முடிவின்படி நாங்கள் செயல்படுவோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com