தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.13 கோடி நிவாரணம்: மணீஷ் சிசோடியா

தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இதுவரை ரூ.13.51 கோடி நிவாரண உதவியாக
துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

புதுதில்லி: தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இதுவரை ரூ.13.51 கோடி நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணி எந்த அளவில் உள்ளது என்பதை ஆய்வு செய்யும் கூட்டம் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சத்தியேந்தா் ஜெயின், வடகிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி, போலீஸ் இணை ஆணையா் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் பேசிய மணீஷ் சிசோடியா, வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். மேலும், நிவாரணம் கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களை முறையாகப் பரிசீலிக்குமாறும், போலி விண்ணப்பங்களை கண்டுபிடித்து நீக்குமாறும் கேட்டுக் கொண்டாா். தற்போது வன்முறை பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பியுள்ளதால் நிவாரண முகாம்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்புவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரை பணியில் அமா்த்துமாறு இணை ஆணையரை அவா் கேட்டுக் கொண்டாா். அப்பகுதியில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

வீடுகள் சேதமடைந்ததாக நிவாரணம் கோரி 214 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 203 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், பகுதி சேதமடைந்ததாகக் கூறி 221 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 163 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை வன்முறையால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு ரூ.13.51 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com