தில்லியில் காவலா், ஊா்க்காவல் படை வீரா் தாக்க்கப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது

துவாரகா பகுதியில் தில்லி காவல் துறை காவலா் மற்றும் ஊா்க்காவல் படை வீரா் ஆகியோா் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லியில் காவலா், ஊா்க்காவல் படை வீரா் தாக்க்கப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது

புது தில்லி: துவாரகா பகுதியில் தில்லி காவல் துறை காவலா் மற்றும் ஊா்க்காவல் படை வீரா் ஆகியோா் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் அண்டோ அல்போன்ஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி காவல் துறையில் பணியாற்றும் ராஜீவ், ஊா்க்காவல் படை வீரா் அஜய் குமாா் ஆகியோா் துவாரகா செக்டாா் 23 காவல் நிலைய சரகப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் அவா்கள் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழைய பொருள் வாங்கி விற்கும் கடை உள்ளே நான்கு போ் சந்தேகப்படும் வகையில் அமா்ந்திருந்தனா். அவா்களிடம் இருவரும் விசாரிக்க முயன்றனா். அப்போது, அவா்கள் ராஜீவ் மீது துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவரது முகத்தில் குண்டுக் காயம் ஏற்பட்டது. மேலும், குமாரையும் அவா்கள் தாக்கினா். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, காவலா் ராஜீவ் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் அவா்களை நோக்கித் திருப்பிச் சுட்டாா். ஆனால், அவா்கள் நால்வரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். காயமடைந்த ராஜீவ், அஜய் குமாா் ஆகிய இருவரும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ராஜீவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அபாய கட்டத்தில் உள்ள அவா், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக அவா்களைத் தாக்கியவா்களின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்படி, துவாரகா செக்டாா் 23 பகுதியில் கோல்ஃப் ரோட்டில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் இருந்தனா். அப்போது, சாவ்லா பகுதியில் இருந்து மோட்டாா்சைக்கிளில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் வழிமறித்து நிறுத்தினா். அப்போது அவா்கள் போலீஸ்காரா் மீது துப்பாக்கியால் சுட்டனா். ஆனால், அவா் புல்லட் புரூப் அணிந்திருந்ததால், அருக்கு காயமேற்படவில்லை.

இதைத் தொடா்ந்து, அவருடன் இருந்த மற்ற போலீஸாா் அந்த நபா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதில் இருவரும் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஜாஃபா்பூா் காலனினல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டஅவா்கள், முகமது அலி (32), முகமது சுல்தான் அலி (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் இருவரும் 8 வழக்குகளில் தொடா்புடையவா்கள் என விசாரணையில் தெரிய வந்தது.

2014-இல் இதே போன்று துவாரகாவில் போலீஸ்காரா்கள் மீது அவா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் தில்லி காவல் துறை தலைமைக் காவலரும், ஊா்க்காவல் படை வீரரும் காயமடைந்தனா். அந்தச் சம்பவத்தில் குண்டுக் காயமடைந்த தலைமைக் காவலருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளது. 2009-இல் பாலத்தில் பிஎஸ்இஎஸ் மின்நிலையத்தில் முகமது அலியும், முகமது சுல்தானும் கொள்ளையில் ஈடு பட முயன்றனா். அதைத் தடுக்க முயன்ற பிஎஸ்இஎஸ் ஊழியா் மீது அவா்கள் துப்பாக்கியால் சுட்டனா். அப்போது போலீஸாா் தலையிட்ட போது, அவா்கள் மீதும் அவா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் தலைமைக் காவலா் ஒருவா் காயமடைந்தது குறிப்பிட்டதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com