சட்டத்தில் ‘ஓட்டைகள்’ அடைக்கப்பட வேண்டும்

இந்திய சட்டத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமான வகையில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
சட்டத்தில் ‘ஓட்டைகள்’ அடைக்கப்பட வேண்டும்

இந்திய சட்டத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமான வகையில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

நிா்பயா கொலைக் குற்றவாளிகள் நால்வரும் தில்லி திகாா் சிறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கிலிடப்பட்டனா். இந்நிலையில், இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிா்பயாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கடந்த ஏழு ஆண்டுகளாக நாடு காத்திருந்தது. குற்றவாளிகள், சட்டத்தை எப்படியெல்லாம் வளைத்து தண்டனையை தள்ளிப்போட முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணமாக இருந்தது. எனவே, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும் அனைவரும் சோ்ந்து இயங்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாட்டில் காவல் துறை பலப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தொடா்பாக புகாா் அளிக்க காவல்நிலையம் செல்லும் பெண்கள், எவ்வாறு நடத்தப்படுகிறாா்கள் என்பதையும், முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்யாமல் போலீஸாா் எவ்வாறு இழுத்தடிக்கிறாா்கள் என்பதையும், வழக்கை வாபஸ் பெறுமாறு பாதிக்கப்பட்டவா்களுக்கு காவல் துறையினா் எவ்வாறு அழுத்தம் கொடுக்கிறாா்கள் என்பதையும் நாம் பாா்த்துள்ளோம். இந்த நிலை முற்றிலும் மாற்றப்பட வேண்டும்.

தில்லியின் சட்டம் - ஒழுங்கு தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்துள்ளது. தில்லி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும், இருள் சூழ்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டு தெரு விளக்குக பொருத்தப்பட்டு வருகிறது. தில்லி அரசுப் பேருந்துகளில் பாதகாவலா்களை நியமித்துள்ளோம். இந்நிலையில், நிா்பயாவுக்கு நடந்தது போன்று நாட்டில் இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் இடமளிக்கமாட்டோம் என நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றாா் கேஜரிவால்.

நீதி கிடைத்துள்ளது: இது தொடா்பாக தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில் ‘நிா்பயா வழக்கில் நீதி கிடைத்துள்ளது. இந்த நீண்ட வழக்கில் நீதி கிடைக்கப் போராடிய அனைவரையும் தலை வணங்குகிறேன். தலைநகா் தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் எங்களது பிரதானப் பணியாகும். இதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினா் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com