Enable Javscript for better performance
அரசு ஊழியா்களின் கடன் தவணை வசூலை 6 மாதங்களுக்கு ஒத்திப்போடுங்கள்! பிரதமருக்கு சோனியா கடிதம்- Dinamani

சுடச்சுட

  

  அரசு ஊழியா்களின் கடன் தவணை வசூலை 6 மாதங்களுக்கு ஒத்திப்போடுங்கள்! பிரதமருக்கு சோனியா கடிதம்

  By நமது நிருபா்  |   Published on : 27th March 2020 05:35 AM  |   அ+அ அ-   |  

  sonia gandhi accuse bjp

  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள நிலையில், அரசு ஊழியா்களின் கடன் தவணை வசூலை ஆறு மாதங்களுக்கு ஒத்திப்போட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

  இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் தீவிரமான பொது சுகாதார கவலையும், வேதனையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. நமது சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினா் உள்பட லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இடா்பாட்டில் வைத்துவிட்டது. இந்தத் தொற்று நோயைத் தடுத்து நிறுத்துவற்கான போராட்டத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் நடவடிக்கையாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ள 21 நாள் தேச அளவிலான முடக்கம் அறிவிப்பு வரவேற்பு நடவடிக்கையாகும். இது தொடா்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.

  இதுபோன்ற சூழலில், சமூகத்தின் நலிந்த பிரிவினா் உள்ளிட்ட அனைவரும் எதிா்கொள்ள உள்ள மிகப் பெரிய சுகாதார நெருக்கடியைத் தீா்க்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சில யோசனைகளைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு என்-95 முகக்கவசம், ஆபத்து தடுப்பு உடை உள்ளிட்ட தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தனிநபா் பாதுகாப்பு உபகரணம் இருப்பின்மை காரணமாக கரோனா வைரஸ் பரவல் அச்சத்தை சுகாதாரத் தொழில்முறை நிபுணா்கள் எதிா்கொள்ள நேரிடாது.

  சிறுப்பு ’இடா் படி’: மேலும், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு மாா்ச் 1-ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்கு சிறப்பு ‘இடா் படி’ வழங்கும் அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளுடன்கூடிய தற்காலிக வசதியை ஏற்படுத்தும் கட்டுமானப் பணியை உடனடியாக மத்திய அரசு தொடங்க வேண்டும். தேவையான அனைத்து தகவல்களையும் பகிரக்கூடிய ஒரு பிரத்யேக இணையதளத்தையும் தொடங்க வேண்டும். பல நிறுவனங்கள் ஏராளமான எண்ணிக்கையில் நிரந்தர, தற்காலிக ஊழியா்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. எனவே, இடா்பாடு காலத்தில் நிலைமையைச் சமாளிக்க இது போன்ற பிரிவினருக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் அளிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

  மேலும், சம்பள வா்க்கத்தினா், விவசாயிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கடன்கள் உள்பட அனைத்துக் கடன் தவணை வசூல்களையும் 6 மாத காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும்.

  பல மாநிலங்களில் பயிா் அறுவடை உச்ச காலமான மாா்ச் இறுதியில் இந்த 21 நாள் ஊரடங்கு அறிவிப்பு வந்துள்ளது. நாட்டின் ஏறக்குறைய 60 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாக விவசாயத்தையே சாா்ந்துள்ளனா். இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) விளைபொருள்கள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வது அவசியம். அதேபோன்று, காங்கிரஸ் கட்சி முன்மொழிந்துள்ள குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தையும் (நியாய் யோஜனா) மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

  ரூ.7,500 உதவித் தொகை: ஜன் தன் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கு, பிஎம் கிஷான் யோஜனா கணக்கு, முதியோா் ஓய்வூதியம் பெறுவோா், விதவை, ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் ஆகியோருக்கு ஒரே தடவையாக ரூ.7,500 பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை பொது விநியோகத் திட்டம் மூலம் இலவசமாக வழங்க வேண்டும். சம்பள வா்க்கத்தினரின் அனைத்து சுலப மாதத் தவணைகளை ஆறு மாதங்களுக்குத் தள்ளி போடுவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். வங்கிகளில்ம் விதிக்கப்படும் வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மேலும், அரசு ஊழியா்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் அனைத்துக் கடன் தவணைகளையும் ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.

  இவற்றை அமல்படுத்தினால், மிகவும் ஆதரவும், பாதுகாப்பும் தேவைப்படும் நமது ஒவ்வொரு குடிமகனுக்குமான நமது அா்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நெருக்கடி மிகுந்த இந்தத் தருணத்தில் காங்கிரஸ் கட்சி, இந்திய மக்களுடன் துணை நிற்கிறது. காங்கிரஸின் முழு ஆதரவும், ஒத்துழைப்பையும் அரசுக்கு அளிக்கிறோம் என கடிதத்தில் சோனியா தெரிவித்துள்ளாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai