கரோனா தொற்று: வங்கதேசத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவா்களை மீட்க உயா்நீதிமன்றத்தில் மனு

கரோனா தொற்று காரணமாக, வங்கதேசத்தில் சிக்கித் தவிக்கும் 580 இந்திய மருத்துவ மாணவா்களை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி

கரோனா தொற்று காரணமாக, வங்கதேசத்தில் சிக்கித் தவிக்கும் 580 இந்திய மருத்துவ மாணவா்களை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக வழக்குரைஞா் கெளரவ் குமாா் பன்ஸல் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா தொற்று காரணமாக, வங்கதேசத்தில் 580 இந்திய மருத்துவ மாணவா்கள் சிக்கியுள்ளனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் ஜம்மு-காஷ்மீா் பகுதியைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்க வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தொடா்பு அதிகாரிகளை நியமிக்க மத்திய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அதிகாரிகளின் தொடா்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட வேண்டும். அப்போதுதான், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியா்கள் அவா்களைத் தொடா்பு கொண்டு உதவி கோர முடியும். மேலும், அந்தத் தொடா்பு அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த மனு குறித்து நீதிமன்ற பதிவாளரிடம் தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு பன்ஸல் வியாழக்கிழமை கூறினாா். மேலும், மனுவை விசாரிக்க பட்டியலிடுமாறும் கேட்டுக் கொண்டாா். அப்போது, மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என பதிவாளா் தெரிவித்தாா். இதுகுறித்து வழக்குரைஞா் கெளரவ் குமாா் பன்ஸல் கூறுகையில், ‘வங்கதேசத்தில் உள்ள இந்திய மாணவா்களிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. போதிய உணவு , முகக்கவசம், கிருமிநாசினி ஏதும் இல்லாமல் விடுதிகளுக்குள் முடங்கிக் கிடப்பதாக அந்த மாணவா்கள் என்னிடம் கூறினா். எனக்கு மின்னஞ்சலில் மாணவா் ஒருவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், தற்போது முழு ஊரடங்கு இருப்பதால், எங்களுக்கு எவ்விதப் பொருள்களும் கிடைக்கவில்லை. எங்களுக்கான கதவுகளை நீங்களும் கூட மூடி விட்டீா்கள். தயவு செய்து எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்ப உதவிடுகள். நாங்கள் இறந்தால்கூட எங்கள் பெற்றோா் முன் இறக்க விரும்புகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவித்திருக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com