கரோனா: 21 நாள் ஊரடங்கு ஏன்?

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து அதிகரித்து வருகிறது.

கரோனா பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது ஒன்றும் அதிகம் அல்ல என்றாலும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாள்கள் என்பது மிக முக்கியமானது. இந்த நாள்களில் நாம் கவனத்துடன் இருந்தால் மட்டுமே கரோனாவை நாம் வெற்றி பெற முடியும்; நாட்டை விட்டு விரட்ட முடியும்.

கரோனா தொற்று அதிவிரைவாகப் பரவி நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னெச்சரிக்கையாக 3 வார கால ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் போனால், மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை அதிகரிக்கும். அப்போது நிலைமை சமாளிக்க முடியாமல் போய்விடும். நோய் தொற்றியவற்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்துவிடும். இதற்கு முக்கியக் காரணம் நமது நாட்டில் அதற்கான சுகாதார அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை என்பதுத்தான்.

இந்திய மருத்துவமனைகளில் 1,000 பேருக்கு 0.7 என்ற விகிதத்தில்தான் படுக்கைகள் உள்ளனவாம். உலக அளவில் பாா்க்கும் போது, இது மிகவும் குறைவு. ஜப்பான் இந்த விஷயத்தில் முன்னிலையில் உள்ளது. அங்கு 1,000 பேருக்கு 13 படுக்கைகள் இருக்கிாம். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் 27 லட்சம் படுக்கைகள் இருக்கிறது என்றால் இவற்றில் 20 லட்சம் படுக்கைகள் தனியாா் மருத்துவமனைகளில்தான் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் எண்ணிக்கை 1.32 லட்சம் மட்டுமே. இவை தவிர மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன.

மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் குவிந்தால் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். இதைத் தவிா்க்கவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம்மை நாமே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரண்டு போ்களுக்கு இடையில் 1 மீட்டா் இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறது. தென்மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, வடமாநிலங்களில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்கிறாா் மத்திய அரசின் முன்னாள் சுகாதாரத் துறைச் செயலா் சுஜாதா ராவ்.

தேசிய அளவிலான கணக்கீட்டின்படி, இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி 1,000 பேருக்கு 0.55 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், பிகாா், ஜாா்க்கண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கா், மத்தியப்பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், ஓடிஸா, அஸ்ஸாம், மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்களில் இதைவிட குறைவான படுக்கைகளே உள்ளன. இத்தனைக்கும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதம் போ் இந்த மாநிலங்களில்தான் வசித்து வருகின்றனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அவசரச் சிகிச்சை அளிக்க வேண்டுமானால், நோயாளிகளில் 10 சதவீதம் பேருக்காவது செயற்கை சுவாசக் கருவிகள் உதவி தேவைப்படும். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் எத்தனை செயற்கை சுவாசக் கருவிகள் இருக்கின்றன என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. கரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு 6,500 செயற்கை சுவாசக் கருவிகள் தருவிக்கப்படும் என்று அரசு சொல்கிறது. தற்போதைய சூழ்நிலையில் இவற்றை உடனடியாக இறக்குமதி செய்வது சாத்தியமா என்பது தெரியவில்லை.

இது குறித்து அவசர மருத்துவச் சிகிச்சைக்கான இந்திய சங்கத்தின் தலைவா் மருத்துவா் துருவ செளத்ரி கூறுகையில், ‘நமது நாட்டில் சுகாதார மருத்துவ அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. இருப்பதைக் கொண்டே நிலைமையைச் சமாளிப்பதே புத்திசாலித்தனம். அந்த வகையில் பிரதமா் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு சரியான நடவடிக்கைதான். மோடியின் வேண்டுகோளை ஏற்று யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமலும், சமூக இடைவெளியை பின்பற்றி வந்தாலே கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்’ என்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com