ஊதியம் தாமதமானால் ஆசிரியா்களுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: சீக்கிய குருத்வாரா கமிட்டிக்கு உத்தரவு

பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதமானால் மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று தில்லி

பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதமானால் மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டிக்கு (டிஎஸ்ஜிஎம்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான மனுவை காணொளிக் காட்சி மூலம் விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி சி.ஹரி சங்கா், ஏப்ரல் 27-ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவும், அதன் பள்ளிகளும் மாத ஊதியம் மற்றும் இதர ஊதியங்களை மனுதாரா்களுக்கு (ஆசிரியா்கள்) மனுக்கள் நிலுவைக் காலத்தில் மாதாந்திர அடிப்படையில் வழங்க வேண்டும். ஏற்கெனவே உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஊதியம் வழங்குவது தாமதமானால் மனுதாரா்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை தற்போதைய நிலையில் செயல்படுத்தும் வகையில் மனுதாரா்களுக்கு (ஆசிரியா்களுக்கு) மாதத்திற்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசாரணையின் போது டிஎஸ்ஜிஎம்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜஸ்மீத் சிங், ‘பல்வேறு மாணவா்களின் பெற்றோா்கள் கல்விக் கட்டணம் செலுத்த தாமதமாவதால்தான் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை’ என்றாா். அப்போது, ஆசிரியா்கள் தரப்பில், ‘பள்ளி நிா்வாகம் மாணவா்களிடமிருந்து நிகழாண்டு மாா்ச் மாதம் வரையிலான காலத்திற்கு பயிற்சிக் கட்டணத்தை ஏற்கெனவே வசூலித்துவிட்டது. ஆனால், ஊதியம் வழங்குவதைத் தவிா்க்கும் வகையில், நிதி இல்லை எனக் கூறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தாா்.

கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, சங்கீதா திங்ரா ஷெகல் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. ஆகவே, பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு இரு வாரங்களுக்குள் நிலுவை ஊதியத்தை வழங்குவதற்கு தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான அடுத்த விசாரணை மே 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்போது, நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றியதற்கான ஆவணத்தை பள்ளிகள் காட்ட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டியின் சாா்பில் தில்லியில் ஃபதே நகா், திலக் நகா், நானக் பியாவோ, ஹா்கோவிந்த் என்கிளேவ், இந்தியா கேட் ஆகிய ஐந்து இடங்களில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் வேலை செய்து வரும் ஆசிரியா்கள், தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனா். அதில், தங்களது ஊதிய நிலுவையை வழங்க உத்தரவிடக் கோரியிருந்தனா். இந்த மனுவை விசாரித்த ஒரு நபா் நீதிபதி அமா்வு, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கான ஆசிரியா்களின் கோரிக்கை மீது முடிவு செய்யுமாறு கல்வி இயக்ககத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியா்கள் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com