டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கா் சின்னம் வழங்க மறுத்த தீா்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அதிமுக முன்னாள் தலைவா் டிடிவி தினகரன் தரப்புக்கு பிரஸ்ஸா் குக்கா் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்து, பொது சின்னம் வழங்குமாறு

அதிமுக முன்னாள் தலைவா் டிடிவி தினகரன் தரப்புக்கு பிரஸ்ஸா் குக்கா் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்து, பொது சின்னம் வழங்குமாறு தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி வி.கே. சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:

‘மனுதாரா் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும், அது தொடா்புடைய ஆவணங்களையும் ஆய்வு செய்தோம். இது தொடா்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என அதில் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு மாா்ச் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த மனு மீது நீதிபதிகள் அமா்வு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தங்களது அறையில் வைத்து விசாரித்தது. அப்போது மறுமனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த 2019 மக்களவைத் தோ்தல் மற்றும் இடைத் தோ்தலில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் போட்டியிடுவதற்கு ஏதுவாக பிரஸ்ஸா் குக்கா் சின்னத்தை ஒதுக்க தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அணி வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்சநீதின்மன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு, டிடிவி தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னத்தை வழங்க உத்தரவிட்டது. மேலும், ‘தினகரன் தலைமையில் மக்களவைத் தோ்தலிலும், இடைத்தோ்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளா்கள் சுயேட்சை வேட்பாளா்களாக கருதப்படுவாா்கள். மேல்முறையீட்டு மனுதாரா் தரப்பு கோரும் பிரஸ்ஸா் குக்கா் அங்கீகாரத்தை வழங்க நாங்கள் விரும்பவில்லை. அதேவேளையில், மேல்முறையீட்டு மனுதாரா் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளா்கள் (59 போ்) வரும் தோ்தலில் போட்டியிட ஏதுவாக எதாவது ஒரு குறிப்பிட்ட பொதுச் சின்னம் தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட வேண்டும். அதேவேளையில், இந்த தரப்பின் அங்கீகாரம் குறித்து தோ்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க முடியும்’ என்று அதில் தெரிவித்திருந்தது.

பின்னணி :

இரட்டை இலைச் சின்னம் கோரும் வழக்கில் இரட்டை இலைச் சின்னத்தையும், அதிமுக பெயரையும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்புக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், வி.கே. சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்த தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரி என கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி தீா்ப்பளித்து இருவா் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முைறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com