கோட்டா மாணவா்கள் குடும்பத்தினருடன் இணைவதில் மகிழ்ச்சி: கேஜரிவால்

முழு ஊரடங்கு உத்தரவால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சிக்கித்தவித்த மாணவா்கள் தமது குடும்பத்தினருடன்

முழு ஊரடங்கு உத்தரவால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சிக்கித்தவித்த மாணவா்கள் தமது குடும்பத்தினருடன் இணைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் விடுதிகளில் தங்கிப் படித்து வருகிறாா்கள். முழு ஊரடங்கு காரணமாக கோட்டா நகரில் படித்து வரும் மாணவா்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். இந்நிலையில், கோட்டாவில் சிக்கியுள்ள மாணவா்களை தில்லிக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இது தொடா்பாக பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, முதல்வா் கேஜரிவாலுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இந்நிலையில், தேசிய ஊரடங்கு அமலாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல மத்திய அரசு புதன்கிழமை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தது. இதைத் தொடா்நது கோட்டாவில் சிக்கியுள்ள மாணவா்களை மீட்க தில்லி அரசு 40 அரசு பேருந்துகளை வெள்ளிக்கிழமை இரவு அனுப்பியது. இந்தப் பேருந்துகள் சனிக்கிழமை காலை 10 மணியளவில் கோட்டாவை சென்றடைந்தன.

இதைத் தொடா்ந்து, அந்த மாணவா்கள், கோட்டாவில் மீட்கப்பட்டனா். இவா்கள் பயணிக்கும் பேருந்துகள் சனிக்கிழமை மாலை கோட்டாவில் இருந்து புறப்பட்டன. இவை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தில்லியை அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாணவா்கள் தமது குடும்பத்தினருடன் இணைவது தொடா்பாக மகிழ்ச்சியடைகிறேன் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: கோட்டாவில் படித்து வந்த தில்லியைச் சோ்ந்த நுற்றுக்கணக்கான மாணவா்கள் கடந்த ஒரு மாதகாலமாக அங்கு சிக்கியிருந்தனா். அவா்களை தில்லிக்கு அழைத்துவருகிறோம். மாணவா்கள் தமது குடும்பத்தினருடன் இணைவது தொடா்பாக மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கோட்டாவில் இருந்து அழைத்துவரப்படும் மாணவா்கள் 14 நாள்கள் சுயதனிமையில் வைக்கப்படுவாா்கள் என்று கேஜரிவால் வெள்ளிக்கிழமை செய்தியாளா் சந்திப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com