தொழில் நிமித்தமாக தில்லி வர வழக்குரைஞர்களுக்கு உத்தர பிரதேச, ஹரியாணா அரசுகள் அனுமதி


புது தில்லி: வழக்குரைஞர்கள் தொழில் நிமித்தமாக தில்லி செல்ல மின்னணு அனுமதிச் சீட்டு வழங்கத் தயாராக இருப்பதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ஹரியாணா, உத்தர பிரதேச மாநில அரசுகள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து இவ்வாறு அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ன. 
இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலமும், கௌதம் புத் நகர் மற்றும் காஜியாபாதில் தங்கியிருக்கும் வழக்குரைஞர்கள், தொழில் நிமித்தமாக தில்லி செல்ல அனுமதிக்க தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக மின்னணு அனுமதிச்சீட்டு வேண்டுவோர் தங்கள் பகுதியில் உள்ள சிறப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனுமதிச்சீட்டை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் சித்தார்த் மிருதுள் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பான மனு மீது திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தியது. மேல் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.
தில்லி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவரும் வழக்குரைஞருமான கே.சி.மிட்டல் , வழக்குரைஞர்கள் பக்கத்து மாநிலங்களிலிருந்து தில்லி வந்து தொழில் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தார். 
யார், யாருக்கு மின்னணு அனுமதிச் சீட்டு வழங்குவது என்ற பட்டியலை கௌதம் புத் நகர் மற்றும் காஜியாபாத் சிறப்பு அதிகாரிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. ஆனால், அதில் வழக்குரைஞர்களுக்கு பட்டியலில் இடம் இல்லை. மேலும் அவை மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கான அனுமதிச்சீட்டுதான் என்று விசாரணையின் போது மிட்டல் குறிப்பிட்டார். மேலும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு வழக்குரைஞர் செல்ல அனுமதிக்கும் வகையில் புதிய படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் விண்ணப்பித்த அரை மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவை ஒருவாரத்திற்கு செல்லத்தக்கதாக இருக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தில்லி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் பலர் தில்லிக்கு வெளியே குடியிருந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் அலுவலகங்கள் தலைநகரில்தான் உள்ளன. அவர்கள் தங்கள் தொழிலை தில்லிக்கு வந்துதான் செய்யும் சூழ்நிலை உள்ளது. வழக்குரைஞர்கள் காலையில் தில்லி அலுவலகம் வருவதற்கும், மாலையில் உ.பி., ஹரியாணா எல்லைப்பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com