புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நடமாடும் உணவுக் கூடங்கள்: டிஎஸ்ஜிஎம்சி அமைத்தது

புது தில்லி: தில்லியில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தில்லி - உத்தர பிரதேசம் எல்லை, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் 10 இடங்களில் நடமாடும் உணவுக் கூடங்களை தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) அமைத்துள்ளது.

இது தொடர்பாக அக்கமிட்டியின் தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா திங்கள்கிழமை கூறியதாவது: 
தில்லியில் இருந்து கடந்த சில தினங்களாக லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக செல்கிறார்கள். அவர்களுக்கு செல்லும் வழியில் உணவு கிடைப்பதில்லை எனப் புகார்கள் கிடைக்கப்பெற்றன. இதைத் தொடர்ந்து, தில்லி - உத்தர பிரதேச மாநில எல்லை, தேசியத் தலைநகர் வலயப் பகுதி ஆகியவற்றில் 10 இடங்களில் நடமாடும் உணவுக் கூடங்களை அமைத்துள்ளோம். இந்த உணவுக் கூடங்கள் நொய்டா, காஜியாபாத், சீலம்புரி, ஷாரதா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த இடங்களில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, சுத்தமான குடிநீர் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த உணவு வகைகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விநியோகிக்கப்படுகின்றன. நடைப்பயணமாக தங்களது சொந்த இடங்களுக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள குருத்வாராக்களைத் தேடிச் சென்று உணவு பெறுவது கஷ்டமானது என்பதால், இந்த நடமாடும் உணவுக் கூடங்களை அமைத்துள்ளோம். 

அனைத்து நடமாடும் உணவுக் கூடங்களும் தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் இருந்து தினம்தோறும் காலை 9 மணிக்கு புறப்படுகின்றன. மேலும், தங்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களின் நலன் கருதி, தில்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் உணவு வழங்கும் சேவையை தொடங்கியுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com