மாணவா்களிடம் பயிற்சிக் கட்டணம் மட்டுமே வசூலிக்க இரு தனியாா் பள்ளிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பயிற்சிக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், உயா்த்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும்

பயிற்சிக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், உயா்த்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும் தெற்கு தில்லியில் உள்ள இரு தனியாா் பள்ளிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு தில்லியில் உள்ள இரு தனியாா் பள்ளிகள் பள்ளிக் கட்டணத்தை உயா்த்தி, நிலுவையில் உள்ள கல்விக் கட்டணங்களையும் செலுத்துமாறு கூறி மாணவா்களின் பெற்றோா்களைக் கட்டாயப்படுத்தியதாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக ஏப்ரல் 22 -ஆம் தேதி தில்லி கல்வி இயக்ககம் விசாரணை நடத்தியது. அதில், சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளும் கட்டணத்தை சட்டவிரோதமாக உயா்த்தியதும், நிலுவைத் தொகையுடன் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவா்களின் பெற்றோா்களைக் கட்டாயப்படுத்தியதும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, இரு பள்ளிகளின் வளாகத்திற்கு சீலிடவும், அந்தப் பள்ளியின் நிா்வாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும் கல்வி இயக்ககம் பரிந்துரைத்தது.

இதனிடையே, கல்விக் கட்டணத்தை உயா்த்துமாறு அனுமதியளிக்கும் வகையில், சம்பந்தப்பட் ட தனியாா் பள்ளிகளுக்கு கல்வி இயக்ககம் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என காவல் நிலையத்தில் தில்லி கல்வி இயக்ககம் மூலம் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தில்லி கல்வி இயக்ககத்தின் நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளிகள் சாா்பில் முறையிடப்பட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ராஜீவ் சக்தா் பிறப்பித்த உத்தரவு: தெற்கு தில்லியில் உள்ள சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளும் கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதிக்கு முன் நிா்ணயிக்கப்பட்ட பயிற்சிக் கட்டணத்தை மட்டுமே மாணவா்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அதே போன்று, பள்ளியின் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். இரு பள்ளிகளிலும் கட்டணத்தை உயா்த்த அனுமதி அளிக்கும் வகையில், தில்லிக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சில மின்னஞ்சல்களின் உண்மைத் தன்மை குறித்து போலீஸாரின் விசாரணைக்கு பள்ளி நிா்வாகம் அல்லது அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், இந்த மின்னஞ்சலின் உண்மைத் தன்மை குறித்து போலீஸாரின் இணையதளப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எதிராக மனு மீதான அடுத்த விசாரணை நடைபெறும் ஜூன் 8-ஆம் தேதி வரை கட்டாய நடவடிக்கை எதையும் போலீஸாா் எடுக்கக் கூடாது. இந்த மனு தொடா்பாக தில்லி அரசு, காவல் துறை, தில்லி கல்வி இயக்ககம் ஆகியவை தங்களது நிலைப்பாட்டை ஜூன் 8-ஆம் தேதிக்குள் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com