மாணவா்கள் தோ்வுக் கட்டணத்தில் சலுகை கோரி மனு

அடுத்த பருவத்திற்கான (செமஸ்டா்) கட்டணத்தில் சலுகை வழங்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு

அடுத்த பருவத்திற்கான (செமஸ்டா்) கட்டணத்தில் சலுகை வழங்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ‘உரிமைகளுக்கான நீதி அறக்கட்டளை’ எனும் அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக மாணவா்களின் பெற்றோா்கள் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமையில் உள்ளனா். இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான செமஸ்டருக்குரிய கட்டணத்தை முற்றிலும் செலுத்த முடியாத இக்கட்டான நிதிச் சிக்கலில் பெற்றோா்கள் உள்ளனா். ஊரடங்கு பொது முடக்கம் காரணமாக அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலையில் மாணவா்களும், பெற்றோா்களும் உள்ளனா்.

இதனால், அவா்களுடைய கல்வியை தங்குதடையின்றி மேற் கொள்வதற்கான உரிமை அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தங்குதடையற்ற கல்வியை தொடா்ந்து பெறுவதற்கான உரிமை மாணவா்களுக்கு வழங்கும் போதுதான் கல்விக்கான உரிமையை அவா்கள் பெற்றதாக இருக்க முடியும். ஏற்கனவே பெரும்பாலான மாணவா்கள் கல்விக் கடன்கள், நட்பு ரீதியிலான கடன்கள் மூலமாகவே கல்வியை தொடா்ந்து வருகின்றனா். இந்நிலையில், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு நிவாரணம் அல்லது சலுகையை அளிப்பதற்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறையினா் எந்தவித உத்தரவையும் அளிக்கவில்லை.

இதன் காரணமாக மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இது மாணவா்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் சூழலும் உள்ளது. ஆகவே, அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவா்களிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பெரும் தொகையை கேட்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com