வடகிழக்கு தில்லி வன்முறை: ஜாமியா மாணவர் கைது

வடகிழக்கு தில்லி வன்முறை: ஜாமியா மாணவர் கைது


புது தில்லி: தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஆசிஃப் இக்பால் தன்ஹா (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லி ஷாஹீன் பாக் நகர் அபுல் ஃபசல் என்கிளேவில் வசிக்கும் ஆசிஃப் இக்பால் தன்ஹா, இஸ்லாமிய மாணவர் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் வன்முறை வெடித்தது. அப்போது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேருந்துகளும், இரண்டு காவல்துறை வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், போலீஸார், மாணவர்கள் என 40 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த வன்முறைய தொடர்பாக ஆசிஃப் இக்பால் தன்ஹா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: 
கைது செய்யப்பட்ட ஆசிஃப் இக்பால் தன்ஹா, தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், பாரசீக மொழியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். “ஜாமியா போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளார். குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து, 2019, டிசம்பரில் ஜாமியாவில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. இது தொடர்பாக ஜாமியா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசிஃப் இக்பால் தன்ஹா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஆசிஃப் இக்பாலின் பெயர் இருந்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரன் ஹைதர் மற்றும் சபூரா ஜர்கர் ஆகியோருடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். “இவர் மே 31- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார் அந்த அதிகாரி.

ஜாமியா போராட்ட ஒருங்கிணைப்பு குழு கண்டனம்
மாணவர் ஆசிஃப் இக்பால் தன்ஹா கைது செய்யப்பட்டதற்கு, தில்லி ஜாமியா போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு தில்லி வன்முறை தொடர்பான உண்மையான சூத்திரதாரிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, அப்பாவி மாணவர்களை தில்லி காவல் துறை கைது செய்து வருகிறது. காவல்துறையின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com