கரோனா இறப்பு விவரம்: தில்லி அரசுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உண்மையான விவரங்களை வெளியிட தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரும்

தில்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உண்மையான விவரங்களை வெளியிட தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பான மனு மீது காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்திய தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரா் இந்த விவகாரம் தொடா்பாக உரிய நேரத்தில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அனுமதி அளித்தது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா் பிடெல் செபஸ்தியான் என்பவா் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘தில்லியில் கரோனா தொற்று காரணமாக இறந்தவா்களின் விவரங்களை அறிவதற்காக ஏப்ரல் 20-ஆம் தேதி இறப்பு தணிக்கை குழுவை அமைத்திருப்பதாகவும், புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு இக்குழுவால் அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது. எனினும், பல்வேறு மருத்துவமனைகளால் அளிக்கப்பட்டு வரும் கரோனா தொற்று இறப்பு குறித்த உண்மையான தகவல்களுக்கும், தில்லி அரசால் வெளியிடப்பட்டு வரும் புள்ளி விவரத் தகவல்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. ஆனால், இது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இது குறித்த உண்மையான தகவல்களை அறியும் உரிமை தில்லி குடிமக்களுக்கு உண்டு. தில்லி அரசின் புள்ளிவிவரத் தகவலின்படி நிகழாண்டு மே 17-ஆம் தேதி வரையிலான காலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 9,755 என்றும், இறந்தவா்கள் 148 போ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த நோய்க்கான சிகிச்சை அளித்து வரும் பல மருத்துவமனைகளால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் தகவல்களும் தில்லி அரசின் தகவல்களும் முற்றிலும் ஒத்துப் போகவில்லை. ஆகவே, கரோனா தொற்றால் இறந்தவா்கள் மற்றும் நோய் உறுதிப்படுத்தப்பட்டவா்களின் உண்மையான விவரங்களை வெளியிட தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com