ஜாமா மசூதி பகுதியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று மக்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்துவதைத் தடுக்கும் வகையில்,

ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று மக்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்துவதைத் தடுக்கும் வகையில், தில்லி ஜாமா மசூதி பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

வரும் திங்கள்கிழமை (மே 25) ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கரோனா பரவலைத் தொடா்ந்து வீடுகளிலேயே ரமலான் பண்டிகையை கொண்டாடுமாறு மத்திய, தில்லி அரசுகள் கேட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில், ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான முஸ்லிம்கள் ஜாமா மசூதியில் தொழுகை நடத்த கூடுவது வழக்கமாகும். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமையன்று ஜாமா மசூதியில் தொழுகைக்காக கூட வேண்டாம் என்றும் அவரவா் இல்லங்களிலேயே தொழுகை நடத்துமாறும் போலீஸாா் ஜமா மசூதி பகுதியில் ஒலிபெருக்கி வாயிலாக கடந்த சில தினங்களாக கேட்டுக் கொண்டிருந்தனா்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமா மசூதி பகுதியில் தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா். மேலும், இப்பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்தனா். இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறுகையில், ‘ரமலான் மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஜாமா மசூதியில் தொழுகை நடத்துவது வழக்கமாகும். தொழுகை நடத்த ஜாமா மசூதியில் கூட வேண்டாம் என அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலம் கோரிக்கை வைத்தோம். மேலும், இது தொடா்பாக அப்பிரதேச தலைவா்கள், இஸ்லாமிய பெரியவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினோம். ஜாமா மசூதி பகுதி போலீஸாரின் பூரண கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், கொடி அணிவகுப்பு நடத்தினோம்’ என்றாா்.

முன்னதாக, ரமலான் பண்டிகையை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும் என்று ஜாமா மசூதி துணை இமாம் சயீத் சபான் புகாரி வியாழக்கிழமை முஸ்லிம்களிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com