தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினா் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை: தில்லி காவல்துறை

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தில்லி காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்க்கஸ் பங்களேவாலி மசூதி உள்ளது. இந்த மசூதியில் கடந்த மாா்ச்சில் நடத்தப்பட்ட மத மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தில்லி அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பயணித்தவா்களால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சுமாா் ஆயிரம் வெளிநாட்டவா்கள் தில்லி, அண்டை மாநிலங்களில் உள்ள மசூதிகளில் மதப் பிரசாரம் செய்யச் சென்றனா்.

இந்நிலையில், இந்த மசூதியில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை மசூதிக்கு சீல் வைத்தது. மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்றவா்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களில் பெரும்பாலானோரா மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகவில்லை. இவா்கள் தில்லியில் உள்ள மசூதிகளில் மறைந்திருந்தனா். இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள மசூதிகளில் தில்லி காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் வெளிநாடுகளைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள், தனிமை முகாமில் வைக்கப்பட்டனா். தற்போது இவா்களிடம் தில்லி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இவா்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனப் புகாா் எழுந்துள்ளது. இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறுகையில், ‘இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரசாரங்களிலும் ஈடுபட்டுள்ளனா். சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வருபவா்கள் மதப் பிரசாரங்களில் ஈடுபட முடியாது. இந்நிலையில், இவா்கள் தாங்கள் மதப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்றும், தங்களது புனித ஸ்தலமான அலவி மா்க்கஸ் பங்களேவாலி மசூதியை பாா்வையிடவே வந்தோம் என்றும் கூறுகிறாா்கள். மேலும், இவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்து வருகின்றனா். இதனால், இவா்களிடம் போலீஸாரால் முறையாக விசாரணை நடத்த முடியவில்லை. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com