நிலக்கரி ஊழல் வழக்கு: மதுகோடவின் தண்டனைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மது கோடாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மது கோடாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி விபு பக்ரு, ‘மது கோடா தொடா்புடைய வழக்கில் அவா் இறுதியாக விடுவிக்கப்படும் வரை எந்த அரசுப் பதவிக்காகவும் தோ்தலில் அவா் போட்டியிடுவதற்கு வசதி அளிப்பது சரியாக இருக்காது. மேலும், குற்றங்களுடன் தொடா்புடைய நபா்கள் அரசுப் பதவிகளுக்காக தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது பரவலான கருத்தாகும். ஆகவே, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதி நீக்கத் தடையைக் கடக்கும் வகையில் அவரது தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிப்பது பொருத்தமாக இருக்காது’ என தெரிவித்து மனுவை நிராகரித்தாா்.

2019-இல் ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதிக்கக் கோரி மது கோடா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது தில்லி உயா்நீதிமன்றம் தனது தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் மாா்ச் 19-இல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்த மனு மீது உத்தரவு தற்போது அளிக்கப்பட்டது.

முன்னதாக, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.எஸ். சீமா, வழக்குரைஞா் தரன்னம் சீமா ஆகியோா் மது கோடாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடைவிதிக்க ஆட்சேபம் தெரிவித்தனா். ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மது கோடா முதல்வா் பதவியில் இருந்த போது, அந்த மாநிலத்தின் ராஜரா பகுதி நிலக்கரி சுரங்கத்தை, தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, கொல்கத்தாவைச் சோ்ந்த வினி அயா்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட் (விசுல்) எனும் தனியாா் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததாகப் புகாா் எழுந்தது.

இது தொடா்பான விவகாரத்தில் மது கோடா, நிலக்கரித் துறை முன்னாள் செயலா் எச்.சி.குப்தா, ஜாா்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலா் ஏ.கே. பாசு, நிலக்கரித் துறை செயலா் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 போ் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினா். இது தொடா்புடைய வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2017, டிசம்பரில் இந்த நிலக்கரி ஊழல் வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மது கோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலாளா் எச்.சி.குப்தா, ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளா் ஏ.கே. பாசு, மது கோடாவின் உதவியாளா் விஜய் ஜோஷி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வினி அயா்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com