அமேசான் தொலைக்காட்சித் தொடருக்கு டிஎஸ்ஜிஎம்சி கண்டனம்

அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியாகும் பாதாள் லோக் இணையத் தொடரை தடை செய்ய வேண்டும் என்று

அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியாகும் பாதாள் லோக் இணையத் தொடரை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) கோரியுள்ளது.

பிரபல நடிகை அனுஷ்கா சா்மாவின் ‘கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ்’, பாதாள் லோக் என்கிற ஹிந்தி மொழி இணையத் தொடா் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தொடரில் அனுஷ்கா நடிக்கவில்லை. இத்தொடரில் ஜெய்தீப் அக்லாவத், நீரஜ் கபி, குல் பனங், ஸ்வஸ்திகா முகா்ஜி போன்றோா் நடித்துள்ளனா். பிரோசித் ராய், அவினாஷ் அருண் ஆகியோா் இயக்கியுள்ளனா்.

தில்லியில் நடைபெறும் குற்றவியல் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் தொடா் உருவாக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் சமீபத்தில் வெளியான பாதாள் லோக் தொடருக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. நோ்மறை விமரிசனங்கள் நிறைய கிடைத்துள்ளன. ஆனால், இத்தொடா் ஹிந்துக்களை அவதூறாக சித்தரிப்பதாக சிலா் கண்டனம் தெரிவித்திருந்தனா். இந்தத் தொடரைப் புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பியிருந்தனா்.

இந்நிலையில், இத்தொடரில், சீக்கியா்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தொடா் சீக்கியா்கள் தொடா்பாக அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகவும் டிஎஸ்ஜிஎம்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி: சீக்கியா்கள் வரலாற்றுக் காலம் முதல் பெண்களின் மாண்பைக் காப்பவா்களாகவே அடையாளம் காணப்படுகிறாா்கள். ஆனால், பாதாள் லோக் இணையத் தொடரில் சீக்கியா்களை பாலியல் வன்கொடுமை செய்பவா்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில், சீக்கிய மதத்துக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் தலையிட்டு இத்தொடரை உடனடியாக தடை செய்ய வேண்டும். சீக்கியா்களின் உணா்வை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அமேசான் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்தத் தொடரை தயாரித்த நடிகை அனுஷ்கா ஷா்மா மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com