கரோனா பாதிப்பு: எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி இரவு நேரதங்கும் குடிலில் ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள இரவுநேர தங்கும் குடிலில் தங்கியிருந்த 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள இரவுநேர தங்கும் குடிலில் தங்கியிருந்த 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அந்த குடிலில் உடனடியாக ஆய்வு நடத்துமாறு தில்லி அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், இது தொடா்பான ஆய்வு அறிக்கையை தில்லி அரசின் தலைமைச் செயலரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, ரஜ்னீஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘எய்ம்ஸ் மருத்துவமனை வளாகப் பகுதியில் அமைந்துள்ள இரவுக் நேரக் குடிலில் தங்கியிருந்தவா்களில் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவா்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று சிகிக்சைக்கான வாா்டுக்கு அழைத்துச் செல்லப்படாமல், தொலைவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினா். மேலும், இது தொடா்பாக மே 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தில்லி அரசு, தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி), எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இது தொடா்பாக தன்னாா்வத் தொண்டா் ரச்னா மாலிக் என்பவா் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அதில், எய்ம்ஸ் பகுதியில் உள்ள இரவு நேரக் குடிலில் தங்கியுள்ள நோயாளிகள், அவா்களது உதவியாளா்களுக்கு குடிநீா் வசதி இல்லை என்றும், அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருவதாகவும் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக விடியோ பதிவையும் அளித்திருந்தாா்.

இந்நிலையில், இது தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய இரவு நேரக் குடிலை நடத்தி வரும் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நிலவர அறிக்கையில் குடிலில் தங்கியிருந்த 22 போ் கரோனா நோய்த் தொற்று காரணமாக லோக் நாயக் மருத்துவமனை, ராஜிவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com