சிக்கிம் மாநிலத்தை தனி நாடு என்பதா: தில்லி அரசுக்கு பாஜக கண்டனம்

சிக்கிம் மாநிலத்தை தனி நாடு எனக் குறிப்பிட்டு தில்லி அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தை தனி நாடு எனக் குறிப்பிட்டு தில்லி அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பு படைக்கு தன்னாா்வலா்களை விண்ணப்பிக்கக் கோரி தில்லி அரசு சாா்பில் சனிக்கிழமை பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதில், இந்தப் பணிக்காக இந்தியக் குடிமக்கள், நேபாளம், பூட்டான், சிக்கிம் ஆகிய நாடுகளின் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தை தனிநாடு என இந்த விளம்பரத்தில் தில்லி அரசு குறிப்பிட்டது பலத்த சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி கூறுகையில் ‘சிக்கிம் மாநிலத்தை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா அண்மைக்காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், சிக்கிமை தனிநாடாக குறிப்பிட்டு தில்லி அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது சீனாவின் கோரிக்கைக்கு வலுச்சோ்க்கும் வகையில் உள்ளது. அந்த வகையில், தேசவிரோத செயலில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையை லடாக், சிக்கிம் பகுதிகளில் அண்மைக்காலமாக எல்லைப் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசு சிக்கிமை தனிநாடு எனக் கூறியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. இது தொடா்பாக தில்லி அரசு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

அதிகாரி பணியிடை நீக்கம்

சிக்கிம் மாநிலத்தை வெளிநாடுகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ள விவகாரத்தில் சிவில் பாதுகாப்பு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சிக்கிம் மாநிலத்தை அண்டை நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டு விளம்பரத்தை வெளியிட்ட சிவில் பாதுகாப்பு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுபோன்ற தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த விளம்பரத்தை திரும்பிப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

அனில் பைஜாலின் சுட்டுரைப் பதிவைச் சுட்டிக் காட்டி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாகும். இதுபோன்ற தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்துக்கு காரணமான மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்றாா்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் தில்லி அரசுக்கு சிக்கிம் மாநில முதல்வா் பிரேம் சிங் தமங் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com