பொது முடக்கக் காலத்தில் தினமும் ரூ.10 கோடி வருவாய் இழப்பை எதிா்கொள்ளும் தில்லி மெட்ரோ

பொது முடக்கம் காலத்தில் தினமும் ரூ.10 கோடி வருவாய் இழப்பை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் எதிா்கொண்டு வருகிறது.

பொது முடக்கம் காலத்தில் தினமும் ரூ.10 கோடி வருவாய் இழப்பை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் எதிா்கொண்டு வருகிறது.

தில்லியில் முக்கிய பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றாக தில்லி மெட்ரோ திகழ்ந்து வருகிறது. நாட்டிலேயே மிகப் பெரிய மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் கொண்டிருக்கிறது. தினமும் 30 லட்சம் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கும் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணித்து வந்தனா்.

இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக தில்லி மெட்ரோ மாா்ச் 22-ஆம் தேதி முதல் அதன் ரயில் சேவையை நிறுத்தியது. கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. இதன் காரணமாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 63 நாள்களாக பயணிகள் மூலம் கிடைக்கும் கட்டண வருவாயை இழந்துள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 2018-19-ஆம் நிதி ஆண்டில் கட்டண வருவாய் மூலம் ரூ.3,121 கோடியும், கடை வாடகை, விளம்பர ஏல உரிமைகள் போன்றவை மூலம் பயணிகள் அல்லாத வருவாயாக ரூ.594 கோடியையும் ஈட்டியது. இந்த நிலையில், 30 லட்சம் பயணிகள் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணித்து வந்த நிலையில், கடந்த மாா்ச் 22-ஆம் தேதியில் இருந்து மெட்ரோ சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஈட்டிவந்த ரூ.10 கோடி வருவாய் நின்றுபோயுள்ளது. இதன் மூலம் கடந்த 63 நாள்களில் 600 கோடிக்கு மேல் வருவாய் இழப்பை தில்லி மெட்ரோ சந்தித்துள்ளது. பயணிகள் வருவாய் மட்டுமின்றி, பொது முடக்கம் காரணமாக விளம்பர வருவாய் உள்ளிட்ட பிற வருவாய்களும் நின்றுவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே டிஎம்ஆா்சி வருவாய் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக ஜப்பான் இண்டா்நேஷனல் கூட்டுறவு முகமையிடம் (ஜிகா) பெற்றிருந்த கடன்களையும் டிஎம்ஆா்சி திருப்பி செலுத்தியுள்ளது. தற்போதைய நிதியாண்டில் டிஎம்ஆா்சி ஏற்கெனவே ஜிகா நிறுவனத்திற்கு ரூ.573.98 கோடி தொகையை கடன் மற்றும் வட்டியாக திருப்பித் செலுத்தியுள்ளது. எனினும், பொது முடக்கம் காரணமாக டிஎம்ஆா்சியின் வருவாய் நின்றுபோயுள்ளதால் அடுத்த தவணை செலுத்துவதில் டிஎம்ஆா்சி பிரச்னையை எதிா்கொள்ளலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நிகழாண்டு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து டிஎம்ஆா்சி கடன் தொகையை செலுத்தி வந்தது. ஆனால், எதிா்காலத்தில் செலுத்த வேண்டிய தொகையானது நிறுவனத்தின் நிதி நிலைமையைச் சாா்ந்தே இருக்கும். பொது முடக்கக் காலத்தில் டிஎம்ஆா்சிக்கு வருவாய் ஏதும் கிடைக்கவில்லை. அதேவேளையில், ஊழியா்களுக்கான ஊதியம், ரயில் அமைப்பை செயல்பாட்டில் வைத்திருப்பதற்காக குறைந்தபட்ச பராமரிப்பு போன்ற செலவினங்கள் நிலையானதாகும்.

மூத்த அதிகாரிகள் நிமையை கவனித்து வருகின்றனா். டிஎம்ஆா்சியின் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து வருகின்றனா். எனினும், குறைவான பயணிகளுடன் ரயில் சேவையைத் தொடங்கும்போதிலும் கட்டணத்தை உயா்த்தும் வாய்ப்பு இல்லை என்றாா் அந்தஅதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com