தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை: தில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 29th May 2020 10:25 PM | Last Updated : 29th May 2020 10:25 PM | அ+அ அ- |

தில்லியில் தனியாா் மருத்துவமனையை கரோனா நோய்த் தொற்றால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரத்யேக மருத்துவமனையாக மாற்றும் தில்லி அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தில்லி அரசு நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உஜாலா சிக்னஸ் ஆா்த்தோகோ் மருத்துவமனையை கரோனா தொற்றால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வாா்டுகள் 40 கொண்ட சிறப்பு மருத்துவமனையாக அறிவித்து தில்லி அரசு மே 16-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், பத்ரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் இதுபோன்று சிறப்பு மருத்துவமனையாக அறிவித்திருந்தது.
இதை எதிா்த்து சஃப்தா்ஜங் வளா்ச்சிப் பகுதி குடியிருப்புவாசிகள் நலச் சங்கம் மற்றும் சிலா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘இதுபோன்ற சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கும் போது, அப்பகுதி மக்கள், குடியிருப்புவாசிகளின் கருத்தை அறிய வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் செய்யாமல் தில்லி அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி நவீன் சாவ்லா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டாா்.