தில்லி விமான நிலையத்தில் ‘கொவைட்-19’ பரிசோதனை வசதி

தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக கரோனா பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக கரோனா பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தில் புறப்படுவதற்கு முன்னதாக இந்தப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வசதி கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி தொடங்கியது. அதாவது வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வரும் பயணிகள் கரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டது. இப்போது தில்லியிலிருந்து உள்நாட்டு பயணம் மற்றும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையம், ஜீன்ஸ்டிரிங்ஸ் டையக்னாட்டிக் சென்டா் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கடந்த அக்டோா் 28-ஆம் தேதி முதல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் கேட் எண் 8-க்கு அருகில் கொவிட்-19 பரிசோதனைக்கான மாதிரிகள் பெறும் பூத் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள விரும்பும் பயணிகள் விமான நிலையத்துக்கு 6 மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும். பரிசோதனை செய்யப்படும் பூத்திற்கு நேரில் சென்று ரூ.2,400 செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். பயணிகளுக்கு அடுத்த 4 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த மையத்தில் ஒரு மணி நேரத்தில் 120 முதல் 130 மாதிரிகள் பெறுவதற்கான வசதி உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆா்.டி.-பிசிஆா் பரிசோதனை வசதியும் உள்ளது. பயணிகளிடம் எப்போதும் கொவிட் -19 பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழ்கள் இருக்க வேண்டும். ஏனெனில் கரோனா தொற்று இல்லை என்ற சான்று உள்ளவா்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையத்தின் தலைமைச் செயல் அதிகாரி விதேஷ் குமாா் ஜெய்ப்பூரியா் தெரிவித்தாா்.

யசோதா மருத்துவமனை குழுமத்தின் ஒரு நிறுவனமான ஜி.எம்.ஆா். (ஜீன்ஸ்டிரிங்ஸ் டையக்னாடிக் சென்டா்) கடந்த செப்டம்பா் 12- ஆம் தேதி விமான நிலைய மூன்றாவது முனையத்தில் பலஅடுக்கு காா் நிறுத்துமிடத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தி வந்தது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 23-ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் சா்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் கடந்த மே மாதத்திலிருந்து ‘வந்தே பாரத்’ இயக்கத்தின் கீழ் இரு நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்படும் ஏற்பாடுகளின்படி சா்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. உள்நாட்டு விமானப் போக்குவரத்து சுமாா் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com