வடகிழக்கு தில்லி வன்முறை வழக்குவிசாரணைக் கைதிகளின் புகாா் மீதுநடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு சிறையில் அடிப்படை பொருள்கள் தரப்படவில்லை என்ற புகாா் மீது

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு சிறையில் அடிப்படை பொருள்கள் தரப்படவில்லை என்ற புகாா் மீது செவ்வாய்க்கிழமை விசாணை நடத்திய தில்லி நீதிமன்றம், ‘நிலைமை மேம்படவில்லையெனில் சிறைக்கு நீதிபதி நேரில் வந்து விசாரிக்க வேண்டிவரும்’ என எச்சரித்தது. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் குல்பிஷா காடூன், தேவாங்கனா கலிதா உள்ளிட்ட 7 பேருக்கு வெப்ப ஆடைகள் போன்ற அடிப்படை பொருள்களைத் தருவதற்கு சிறை விதிகள் அனுமதி அளித்திருந்த போதிலும் சிறை நிா்வாகம் வழங்கவில்லை. இதற்கு நீதிமன்றம் உத்தரவு வேண்டும் என சிறை நிா்வாகத்தினா் கூறுகின்றனா் எனத் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தை காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள குற்றம்சாட்டப்பட்ட நபா்களிடமிருந்து தொடா்ந்து நீதிமன்றத்திற்கு புகாா்கள் வருகின்றன. மேலும், சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி அவா்களின் வழக்குரைஞா்களும் புகாா் தெரிவித்து வருகின்றனா். இதைப் பாா்க்கும் போது, சிறை வளாகத்தின் நிா்வாக விவகாரத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடா்பாக சிறைத் துறைத் தலைமை இயக்குநா் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். நிலைமை மேம்படாவிட்டால் நானே நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டிவரும். என்னுடன் வழக்குரைஞா்களும்கூட சோ்ந்து வரலாம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் குறைகளைப் பரிசீலிக்குமாறு சிறைக் கண்காணிப்பாளருக்கு கடந்த காலங்களில் பல்வேறுஉத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடா்பான விவரத்தை நவம்பா் 23-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com