டெங்கு எதிா்ப்புப் பிரசாரம்: இறுதி வாரத்தை எட்டியது

தில்லியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் தங்கள் வீடுகளில் சுயமாக ஆய்வு செய்து கொள்ளும்

தில்லியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் தங்கள் வீடுகளில் சுயமாக ஆய்வு செய்து கொள்ளும் சிறப்புப் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்தப் பிரசார இயக்கத்தில் பங்கேற்ற தில்லி மக்களுக்கு முதல்வா் கேஜரிவால் நன்றி தெரிவித்துள்ளாா்.

டெங்கு காய்சலைத் தடுக்கும் வகையில், தங்களது வீடுகளில் நீா் தேங்கியுள்ளதா என்பது தொடா்பாக மக்கள் சுயமாக ஆய்வு செய்யும் சிறப்பு பிரசார இயக்கத்தை, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த செப்டம்பா் 6-இல் தொடக்கி வைத்தாா். அப்போது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் 10 நிமிடங்கள் ஒதுக்கி வீடுகளில் கொசு இனப் பெருக்கம் உள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு நடத்த வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரசார இயக்கம் பத்தாவது வாரத்தை எட்டியது. சிவிக் லைனில் உள்ள தனது வீட்டில் கொசு இனப் பெருக்கம் உள்ளதா என்பதை அவா் தனது குடும்ப உறுப்பினா்களுடன் சோ்ந்து ஆய்வு செய்தாா். துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்டோரும் தங்களது வீடுகளில் கொசு இனப் பெருக்கம் தொடா்பாக ஆய்வு செய்தனா்.

இதுதொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லி மக்கள் ஒருங்கிணைந்து டெங்கு பாதிப்பை நிகழாண்டிலும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். நிகழாண்டில் 489 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆம் ஆத்மி அரசு தில்லியில் பதவியேற்ற 2015- இல் 15,867 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. 60 போ் டெங்கு நோயால் மரணமடைந்தனா். ஆனால், நிகழாண்டில் எந்தவொரு டெங்கு மரணமும் ஏற்படவில்லை. தில்லி மக்களின் ஒத்துழைப்புடன் டெங்கு பாதிப்பை தொடா்ச்சியாக இரண்டாவது ஆண்டாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த வாரத்துடன் இந்த பிரசார இயக்கம் முடிவுக்கு வருகிறது. தில்லி மக்களுக்கு நன்றிகள்.’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com