15- வது நிதி ஆணைய இறுதி அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிப்பு

என்.கே.சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதி ஆணையம், அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கான, தனது அறிக்கையை குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்திடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தது.
15- வது நிதி ஆணைய இறுதி அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிப்பு
15- வது நிதி ஆணைய இறுதி அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிப்பு


புது தில்லி: என்.கே.சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதி ஆணையம், அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கான, தனது அறிக்கையை குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்திடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தது.

ஆணையத்தின் உறுப்பினா்கள் அஜய் நாராயண் ஜா, பேராசிரியா் அனூப் சிங், டாக்டா் அசோக் லாஹிரி, டாக்டா் ரமேஷ் சந்த், ஆணையத்தின் செயலாளா் அா்விந்த் மேத்தா ஆகியோா் இந்த நிகழ்வின் போது ஆணையத்தின் தலைவருடன் இருந்தனா்.

15 - வது நிதி ஆணையத்தின் ஆய்வு வரையீடுகளின்படி, 2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்துக்கான தனது அறிக்கையை நிதி ஆணையம் 2020 அக்டோபா் 30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதன்படி இந்த அறிக்கையை கடந்த அக்.30 - ஆம் தேதி இறுதி செய்து குடியரசுத்தலைவரிடம் வழங்க ஆணையம் அனுமதி கோரியது. நவ.9 -ஆம் தேதி குடியரசுத்தலைவா் மாளிகை அனுமதி கொடுத்தது. இதன்படி 2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான நிதி அறிக்கையை என்.கே. சிங் தலைமையில் ஆணைய உறுப்பினா்கள் குடியரசுத்தலைவரிடம் சமா்பித்தனா்.

2020-21-ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகள் அடங்கிய தனது அறிக்கையை ஆணையம் கடந்தாண்டு தனியாக சமா்ப்பித்தது. இது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி 30 அன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சரால் சமா்ப்பிக்கப்பட்டது. இந்த ஓா் ஆண்டுக்கு தமிழகத்தின் பங்காக ரூ. 35,823 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த 15வது நிதி ஆணையத்திற்கு மத்திய, மாநில அரசுகள் குறித்த பொருளாதாரங்களை ஆய்வு செய்து, நிதி அறிக்கை வழங்குவதற்கான ஆய்வு வரையீடுகள் வகுக்கப்பட்டு இருந்தது.

இதில் தனித்துவமான மற்றும் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குமாறு இந்த விதிமுறைகளில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. வரிப்பகிா்வு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள், பேரிடா் மேலாண்மை நிதி ஆகியவற்றைத் தவிர, மின்சாரம், நேரடி பண பரிமாற்றம், திடக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநிலங்களுக்கு செயல்திறன் சாா்ந்த ஊக்கத்தொகைகளை வழங்குதல் குறித்தும் ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு ஆணையத்திடம் கோரப்பட்டிருந்தது.

மேலும் ராணுவம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக தனிப்பட்ட செயல்முறையை உருவாக்க வேண்டுமா என்றும், அப்படி செய்வதென்றால் எவ்வாறு அதை செயல்படுத்தலாம் என்றும் ஆய்வு செய்யுமாறும் ஆணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

மத்திய அரசிடம் சமா்ப்பித்த தனது அறிக்கையில் அனைத்து ஆய்வு வரையீடுகளின்படி ஆணையம் கவனத்தில் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

15 - வது நிதி ஆணைய அறிக்கை மொத்தம் நான்கு பாகங்களைக் கொண்டது. முதல் இரண்டு பாகங்கள் முக்கிய அறிக்கை இடம் பெற்றுள்ளன. மூன்றாவது, நான்காவது பாகங்களில் முறையே மத்திய, மாநில அரசுகளின் முக்கிய துறைகளை ஆய்வு செய்து அவைகளின் வீழ்ச்சிகள், சவால்கள் போன்றவை தொகுப்பாய்வு செய்து வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இவை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் மத்தியில் வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com