கரோனா 3-ஆவது அலை 5 நாள்களில் கட்டுக்குள் வரும்: சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை

தில்லியில் தற்போது உள்ள 3-வது கரோனா அலை இன்னும் 4-5 தினங்களில் கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் தற்போது உள்ள 3-வது கரோனா அலை இன்னும் 4-5 தினங்களில் கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் தற்போது மூன்றாவது கரோனா அலை உள்ளது. இந்த அலை இன்னும் 4-5 தினங்களில் கட்டுக்குள் வரும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா். தில்லியில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.59 சதவீதமாக உள்ளது. தில்லியில் வேலை செய்யும் வா்கத்தினரிடம் அதிகளவு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் முகக் கவசங்கள் அணியாமல் மெத்தனமாக உள்ளனா். மக்கள் அனைவரும் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். தில்லி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் மொத்தம் 110 படுக்கைகளை அதிகரித்துள்ளோம். தில்லியில் இதுவரை ஏற்பட்ட கரோனா அலைகளில் இந்த மூன்றாவது அலைதான் மோசமானதாக உள்ளது என்றாா் அவா்.

தனிமைப்படுத்தப்பட்டவா்கள் 50 சதவீதம் அதிகரிப்பு: இதற்கிடையே, தில்லியில் கரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலப் பகுதியில், கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லியில் கரோனா மூன்றாவது அலை உள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதிப்பு தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போது, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 24,723 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3,878 ஆக உள்ளது. ஆனால், கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி வீடுகளில் 16,396 போ் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். அன்று, கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,930 ஆக இருந்தது. அக்டோபா் 26-ஆம் தேதி கரோனா நோ்மறை விகிதம் 8.23 சதவீதமாக இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை இது 15.26 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

பயிா்க் கழிவுகள் எரிப்புச் சம்பங்களாலும், பண்டிகைக் காலத்தால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும், தில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இதேபோல கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை 6,725 பேருக்கும், புதன்கிழமை 6,842 பேருக்கும், வியாழக்கிழமை 6,715 பேருக்கும், வெள்ளிக்கிழமை 7,178 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை 6,953 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 7,745 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. தில்லியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிக அளவு கரோனா பாதிப்பு இதுவாகும். இதேவேளையில், தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 77 பேரும், சனிக்கிழமை 79 பேரும் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com