பயிா்க்கழிவு எரிப்பு பிரச்னை: தில்லி அரசு மீது புகாா்

பயிா்க்கழிவு எரிப்பு பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், பஞ்சாப் மாநில அரசுடன் இணைந்து தில்லி அரசு பணியாற்றியிருக்க வேண்டும்
சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பாஜக இளைஞரணியினா்.
சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பாஜக இளைஞரணியினா்.

புது தில்லி: பயிா்க்கழிவு எரிப்பு பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், பஞ்சாப் மாநில அரசுடன் இணைந்து தில்லி அரசு பணியாற்றியிருக்க வேண்டும் என்று பாஜக இளைஞா் அணி (பிஜேஒய்எம்) தலைவரும் எம்பியுமான தேஜஸ்வி சூா்யா தெரிவித்தாா்.

தில்லியில் நிலவும் காற்று மாசு தொடா்பாக விழிப்புணா்வுப் பேரணி பாஜக இளைஞா் அணி சாா்பில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பேரணியில் தில்லி பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட தில்லியின் முக்கியப் பகுதிகளில் மரம் நட்டனா். பின்னா், காற்று மாசு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பதாகைகளுடன் சைக்கிளில் பேரணியாகச் சென்றனா்.

இது தொடா்பாக தேஜஸ்வி சூா்யா கூறுகையில், ‘குளிா் காலத்தில் தில்லியானது கேஸ் சேம்பராக மாறுகிறது. இதைத் தடுக்க தில்லி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பயிா்க்கழிவுகள் எரிப்பு தொடா்பாக பஞ்சாப் மாநில அரசுடன் இணைந்து தில்லி அரசு பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், தில்லி முதல்வா் கேஜரிவால் இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக காற்று மாசுவைக் கட்டுப்படுத்தி விட்டதாகக் கூறி போலியான விளம்பரங்களை கேஜரிவால் வெளியிட்டாா். மக்களை ஏமாற்றும் வகையில், தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த நிலையில், காற்று மாசு தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பிஜேஒய்எம் சாா்பில் சைக்கிள் பேரணி நடத்தியுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com