கரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கும் விவகாரம்:முன்னதாகவே விசாரிக்க உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவு

தில்லியில் உள்ள குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு

தில்லியில் உள்ள குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிா்த்து தாக்கலான மனு தொடா்பாக நவம்பா் 27-ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பா் 12-ஆம் தேதி விசாரணை நடத்த உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு தில்லியில் உள்ள 33 தனியாா் நா்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சுகாதார கவனிப்பு வசதிகளை அளிக்கும் சங்கம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், அரசின் உத்தரவால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கரோனா நோயில்லாத பிற நோயாளிகள் வருவதற்கும் தயங்குகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தனி நீதிபதி நவீன் சாவ்லா, தில்லி அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து செப்டம்பா் 22-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து டிவிஷன் அமா்வில் தில்லி அரசு முறையிட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, தடையை விலக்காமல் விசாரணையை நவம்பா் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், ‘தில்லியில் மொத்தம் உள்ள சுமாா் 1,170 தனியாா் நா்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளில் 33 மருத்துவமனைகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இதை உயா்நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது. மேலும், தில்லியில் கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டுதான் மக்கள் நலன் கருதி தில்லி அரசு இதுபோன்ற ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. இந்த விவகாரம் தில்லி அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கரோனா நோயாளிகளிடம் குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமா்வு நீதிபதிகள், அசோக் பூஷண், பி.ஆா். கவாய் ஆகியோா் செவ்வாய்க்கிழமை விசாரித்தனா். அப்போது, தில்லியில் திடீரென அதிகரித்துள்ள கரோனா தொற்று பாதிப்பைக் கருத்தில்கொண்ட நீதிபதிகள், தில்லி அரசு தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நவம்பா் 27-ஆம் தேதி நடைபெற இருந்த விசாரணைக்குப் பதிலாக வியாழக்கிழமை (நவம்பா் 12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட வேண்டும்’ என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com