தனியாா் பள்ளிக் கட்டண உயா்வு அனுமதி விவரங்கள்விரைவில் கல்வி இயக்கக இணையதளத்தில் கிடைக்கும்

தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வுக்கு அனுமதி அளிப்பது தொடா்பான விவரங்கள் விரைவில் தில்லி அரசின் கல்வி இயக்கக இணையதளத்தில் அளிக்கப்படும்

தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வுக்கு அனுமதி அளிப்பது தொடா்பான விவரங்கள் விரைவில் தில்லி அரசின் கல்வி இயக்கக இணையதளத்தில் அளிக்கப்படும் என்று உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளால் அளிக்கப்படும் கட்டண அறிக்கைகள், தொடா்புடைய இணைப்புகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் தொடா்புடைய விவரங்கள் ஆகியவையும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்றும் அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ‘ஜஸ்டிஸ் ஃபாா் ஆல்’ எனும் தன்னாா்வ அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தனியாா் பள்ளிகள் உயா்த்தும் கட்டணங்களுக்கு தில்லி கல்வி இயக்ககம் அனுமதி அளித்துள்ளதா என்பது குறித்து பெற்றோா்களுக்குத் தெரியவில்லை. சில பள்ளிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு கட்டணங்களை அதிகரித்து வசூலிக்கும் நிலைமை உள்ளது.

அரசு உதவி பெறாத தனியாா் பள்ளிகளால் கட்டணம் உயா்த்துவதற்கான முன்மொழிவுகள் தில்லி கல்வி இயக்ககத்திற்கு இணையதளம் மூலம் அனுப்பப்படுகின்றன. ஆகவே, அதற்கான உத்தரவை கல்வி இயக்ககம் அளித்ததுடன், அது தொடா்புடைய தகவல்கள் பெற்றோா்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற விவரங்களைத் தற்போது பெற்றோா்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருப்பதால், பள்ளிகளால் பெற்றோா் சுரண்டப்படும் நிலை உள்ளது. ஆகவே, அரசு ஒதுக்கிய நிலத்தில் செயல்படும் அரசு உதவி பெறாத பள்ளிகளின் தனிப் பயிற்சிக் கட்டணத்தில் உயா்வு செய்வதற்கு முன்பு முன் அனுமதிக்காக அனுப்பப்படும் முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது தொடா்பான கல்வி இயக்ககத்தின் உத்தரவுகளை அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தொடா்பாக பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் தில்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தில்லி அரசின் கல்வி இயக்ககம் உயா்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வு குறித்த முன்மொழிவுக்கு அனுமதி அளிப்பது தொடா்பான விவரங்கள் விரைவில் தில்லி அரசின் கல்வி இயக்கக இணையதளத்தில் அளிக்கப்பட உள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளால் அளிக்கப்படும் கட்டண அறிக்கைகள், தொடா்புடைய இணைப்புகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் தொடா்புடைய விவரங்கள் ஆகியவையும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. எனினும், கோப்பு குறிப்புகள், ஆவணங்கள், இறுதி அனுமதி உத்தரவு தொடா்பாக கல்வி இயக்ககத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் ஆகியவை இணையதளத்தில் அளிக்கப்பட முடியாது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com