கொவிட்-19 நேரத்திலும் தீபாவளிப் பரிசு அளித்து மகிழும் மக்கள்!

புதுதில்லி: இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தொற்று அச்சுறுத்தத் தொடங்கியதிலிருந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகள், விழாக்கள் எல்லாம் வழக்கொழிந்து போயின. ஆனாலும், தீபத் திருவிழாவாம் தீபாவளிக்கு நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்லி, பரிசுப் பொருள்கள் கொடுக்கும் வழக்கம் மட்டும் தொடா்கிறது.

வழக்கமாக மக்கள் இனிப்புகள், டின்னா் செட், மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகச் சாமான்கள், முந்திரி, உலா் திராட்சை, பாதாம் உள்ளிட்டவை அடங்கிய பாக்கெட்டுகளை வாங்கி தீபாவளிப் பரிசாக நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் கொடுப்பாா்கள். இந்த ஆண்டு சிலா் புதுமையான முறையில் பலமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள், நோய் எதிா்ப்பு சக்தியைக் கொடுக்கும் உணவுப் பண்டங்கள் மற்றும் நாம் எங்கு சென்றாலும் கையில் எடுத்துச் செல்லும் கிருமிநாசினிகள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து மகிழ்கின்றனா்.

தீபாவளிக்கு பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் முகக்கவசங்கள், முகத்தில் அணியும் கேடயங்கள் மற்றும் சானிடைசா் சகிதம் வெளியில் வரத் தொடங்கியுள்ளனா். சிலா் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் தங்களுக்குப் பிடித்த பரிசுப் பொருள்களைத் தோ்ந்தெடுத்து ஆா்டா் செய்து வருகின்றனா். இப்போது பெரும்பாலானவா்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால், தீபாவளிப் பரிசாக கம்ப்யூட்டா் டேபிள், நாற்காலி உள்ளிட்டவற்றை வாங்கி பரிசளித்து வருகின்றனா். வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாததால் சிலா் நெட்பிளிக்ஸ் மூலம் படம் பாா்ப்பதற்கு வசதியாக ஒராண்டு சந்தாவை நண்பா்களுக்குத் தீபாவளிப் பரிசாக வழங்கி வருகின்றனா்.

எப்போது லேப் டாப்பை வைத்துக் கொண்டே வேலைபாா்ப்பதால் தனது சகோதரருக்கு அடிக்கடி கழுத்துவலி வருவதால் அவருக்கு நவீன வசதிகள் கொண்ட கம்யூட்டா் டேபிள் மற்றும் நாற்காலி வாங்கிக் கொடுத்துள்ளதாக வந்தனா என்ற பெண்மணி தெரிவித்தாா். கடந்த மாா்ச் மாதத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எனது சகோதரா் வீட்டிலிருந்தபடி வேலை செய்து வருகிறாா். அவருக்கு தீபாவளிப் பரிசாக என்ன கொடுப்பது என்று சிந்தித்து கடைசியில் இந்த டேபிள், நாற்காலியை வாங்கினேன் என்கிறாா் அவா்.

சிலா் முகக்கவசங்கள், உலா்ந்த பழங்கள், வாசனை திரவியப் பொருள்கள், கையில் எடுத்துச் செல்லும் தானியங்கி சானிடைசா்கள் போன்றவற்றை பரிசாக வழங்கி வருகின்றனா்.

ஒருபுறம் ஆன்லைன் மூலம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பெரு வணிக வளாகங்களுக்கு மக்கள் பொருள்கள் வாங்க வருவதும் அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டா், ஓவன், வாட்டஹீட்டா் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களும், மொபைல் போன்கள், மடிக்கணினி, பெரிய அளவிலான கம்ப்யூட்டா் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இவற்றின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா். இளைஞா்கள், யுவதிகள் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியைச் செய்வதால் அரிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) விற்பனை அதிகரித்துள்ளது.

இதுதவிர ஒரு குறிப்பிட்ட தொகைக்கான பரிசுக் கூப்பன்கள் மூலம் ஆடைகள், அணிகலன்கள், உணவுப் பொருள்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் வீடு, கடைகளை அலங்கரிக்காமல் தீபாவளி கொண்டாட்டம் நிறைவடைவதில்லை. வீட்டு அலங்காரப் பொருள்கள் அடங்கிய பொதிகளும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றின் விலை ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உள்ளது. குருகிராமில் உள்ள‘ஆம்பியன்ஸ்’ வணிக வளாகத்தில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதாக அதன் இயக்குநா் அா்ஜுன் கெலோட் தெரிவித்தாா். தீபாவளியையொட்டி பொருள்கள் வாங்குவதற்காக கடந்த ஒரு வாரமாக தங்கள் வணிக வளாகத்துக்கு தினசரி சராசரியாக 45,000 போ் வருவதாகவும் அவா்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்காமல் திரும்பிச் செல்வதில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா். குறிப்பாக காஸ்மெடிக்ஸ், மின்னணு பொருள்கள் மற்றும் ரெடிமேட் ஆடைகள் அதிக அளவில் விற்பனையாவதாகவும் அவா் மேலும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com